Thursday, October 13, 2011

தியானம் எங்கும் நிகழலாம்..





                        




தியானம் எங்கும் நிகழலாம்


அடை காத்த வெம்மையில்
வெளி வரும் குஞ்சினைப்போல 



போதி மரத்தினின்றும்
உயிர் பெற்ற பௌத்தத்தில் 



கதிர் தழுவிட
உடல் திறந்து கிடக்கும் மண்ணில் 



உன் கழுத்தின் கதகதப்பில்
மேனி பரவியதொரு மின்சாரம்



தியானம் எங்கும் நிகழலாம்
உன் கதகதப்பிலும்.........

Saturday, October 8, 2011




                    

ஒரு பனை ஓலை என்பது 
ஓர் இலை
ஓர் இலை என்பது 
ஓர் இலை மட்டுமே அன்று 

ஓலையின்  ஒரு கீற்று 
காற்றாடியாகலம் 
ஒற்றை ஓலை ஒரு  
கைவிசிறியாகலாம்

நூறு ஓலைகள் 
ஒரு குடிசையாகும் 
ஒரு ஓலையில் 
பல பறவைகள் கூடு கட்டலாம்

பல ஓலைகள் தலையசைக்க 
பனை மரம் விசிறியாகிறது
புவி கொஞ்சம் காற்று வாங்கலாம்  

ஓலைகள் உரசிட 
இசை பிறக்கலாம் 
ஓர் உயிர் உறங்கிடலாம்

இந்த இலை 
இல்லையென்றால் 
எழுத்தை இழந்திருக்கலாம் 

ஒரு பனை ஓலை என்பது 
ஓர் இலை
ஓர் இலை என்பது 
ஓர் இலை மட்டுமே அன்று ......

Wednesday, October 5, 2011

மாற்றமாகவே மாறிவிடு-உள்ளாட்சி தேர்தலில் "பயிர்" செந்தில்.

                                            "பயிர்" செந்தில்.                




                                        நகரத்தில் தனக்கு கிடைத்த கல்வியும்,வாய்ப்பும் கிராமத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை என்பதை உணர்வால் உணர்ந்தவர். இயந்திரவியல் துறையில் பட்டம் பெற்று,அமெரிக்க நாட்டிற்கு பணிக்கு சென்றவர்.பச்சை அட்டை குடியுரிமை பெறுவதை இலக்காக நினைக்கவில்லை.எப்போது இந்த நாட்டிற்க்கு திரும்புவது,என்று முன்பாகவே தீர்மானித்து விட்டார். இலட்சங்களுக்காக சென்றவர்,இலட்சியங்களோடு திரும்பி வந்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து,துறையூர் செல்லும் பாதையில் இருக்கிறது 'தேனூர்' என்ற கிராமம்.ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தும் வேலைகளில் இறங்கினார்.ஒரு தொடக்கப்பள்ளி,அடிப்படை மருத்துவ வசதி,
காடு வளர்ப்பு,தண்ணீர் வசதி,போக்குவரத்து மேம்பாடு என்று தமது பணியை பரவலாக்கினார்.
இன்று ஒரு முழுமையான நிலையை நோக்கி நகர்கிறது தேனூர் கிராமம்.இத்தோடு இருந்து விடாமல் ஊராட்சி தேர்தலில் பங்கெடுக்கிறார்.ஆம்,இந்த தேர்தலில் போட்டி இடுகிறார் செந்தில்.

ஒரு போதும் ஒதுங்கி நிற்கவில்லை.மாற்றம் பேசுவதில் இல்லை,மாற்றமாகவே மாறிவிடுவதில் தான் இருக்கிறது.மனிதர்களில் மாற்றாகவே மலர்ந்துவிட்டார் இவர்.

                   
                         

அவ்விடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணில் செய்த கற்கள்.செம்மண் ஓடுகள்,புல்லில் இருந்து சேகரிக்கப்பட்ட கூரை,மண் புழு உரம்,சூரிய ஒளியில் ஒளிரும் விளக்குகள்,இயற்கை முறை வேளாண்மை,இத்தனையும் கனவல்ல....அங்கே நடந்து வரும் மாற்றம்.

இந்தியாவின் உயிர் நாடி கிராமங்களில் தான் இருக்கிறது.அன்று காந்தியடிகள் சொன்ன வார்த்தை,இன்று கிராமத்தை நாடி செல்வர் இல்லை.அர்ப்பணிப்புடன் கூடிய இலக்கு மட்டுமே மிசிகன் போனப்பினும் மீட்டு வந்திருக்கிறது.வருகின்ற தேர்தலில் மக்களால் தேர்ந்தடுக்க பட உள்ளார்.
மக்களை அதிகாரப்படுத்துதலில் முழுமையான வெற்றி பெற 
நமது வாழ்த்துகள்.