Saturday, December 31, 2011

மரங்களே வரங்கள்!...



               





மரங்களே வரங்கள்!

கரம் நோக்கி நகர்ந்த மனிதர்கள் மனதில் நகராத ஒன்று... தன்  கிராமத்தின் மீதான பிரியம். நகரங்களில் பிழைப்பு நடந்தாலும் கிராமங்களில்தான் உயிர்ப்பு இருக்கிறது. அந்தக் கிராமங்களின் அடையாளங்களாக இருந்த மரங்களும் சிறு காடுகளும் மெள்ள மெள்ள அழிந்து, தன் அடையாளத்தைத் தொலைத்து இருப்பது பலமுறை சொல்லி முடித்த சோகக் கதை. இழந்துபோன இயற்கையை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேசு கருப்பையா என்ற இயற்கை ஆர்வலர்.

'மழை மண் மரம் மானுடம்’ என்ற அமைப்பை நடத்திவரும் இவர், சமீபத்தில் அந்த அமைப்பின் சார்பில் புதுமையான மரம் நடும் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறார். அந்தத் திட்டத்தின் பெயர் 'பக்தி வழி பசுமை’. அதாவது குலதெய்வ வழிபாட்டு முறையில் மரம் நடுதல். ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் முனைப்போடு களத்தில் இறங்கி உள்ள இவர், முதலில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள 'கொரக்கை’ என்ற கிராமத்தில் இந்தமுறையின் மூலம் 1,000 மரக்கன்றுகளை நட்டுப் பேணிக்காத்துவருகிறார்.
அடுத்தது ராமநாதபுரம், பெரம்பலூர் எனத் தமிழகம் முழுக்க ஒரு லட்சம் மரக் கன்றுகளை நடும் திட்டத்தோடு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருப்பவரைச் சந்தித்தேன்.
''இன்னிக்குக் காவல் தெய்வங்களும், கிராம தேவதைகளும் இல்லாத கிராமங் களே கிடையாது. கடவுள் நம்பிக்கை இல்லாதவங்கக்கூட, மூதாதையர் வழி பாட்டைச் சிறுதெய்வ வழிபாடுனு அங்கீகரிக்கறாங்க. வெளிநாடுகளிலோ வெளியூர்களிலோ பிழைப்புக்காகப் போனவங்கக்கூட வருஷத்துக்குஒருமுறை யாவது தங்களோட மூதாதையர்களை வணங்க, குலதெய்வ வழிபாடு நடத்த கோயிலுக்குப் போறதை வழக்கமா வெச்சு இருக்காங்க. அப்படிப் போறப்போ ஏன் நேர்த்திக்கடனா மரக் கன்றுகளை நட்டு வளர்க்கக் கூடாது என்பதுதான் இந்தத் திட்டத்தின் அடிப்படை. தங்களின் பங்களிப்பா ஒரு மரம் தங்களோட குலசாமி கோயில்ல வளருதுங்கிறது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம். பல தலை முறைகள் தாண்டியும் அது நின்னு நிழல் கொடுத்து, 'இது தாத்தன் வச்ச மரம்.. நம்ம பாட்டன் வச்ச மரம்’னு பேர் சொல்லிக்கிட்டே இருக்கும் இல்லையா? காது குத்த, முடி இறக்க, ஆடு வெட்ட, படையல் போடனு போற ஜனங்க இனி தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் மரங்களை நட்டு அதை வளர்க்க ஆசைப்பட்டா, தமிழ்நாடு முழுக்க லட்சக்கணக்கான மரங் களை உருவாக்கிடலாம்.
இனிமேல் கோயிலுக்குப் போறப்போ தேங்காய், கற்பூரம் மட்டும் வாங்கிட்டுப் போகாம மரக் கன்றுகளையும் வாங்கிட்டு போகணும்கிறதுதான் எங்களோட வேண்டு கோள். இந்த யோசனைக்கு கைமேல் பலன் கிடைச்சிருக்கு. பல மாவட்டங்களில் குல தெய்வங்களுக்கு மரக் கன்றுகளை நடுற வழக்கம் இப்போ கொஞ்சம் கொஞ்சமாப் பரவி இருக்கு.
கோயில்களில் அரிய வகை மரங்களைக் கொண்டு நாற்றங்கால்கள் உருவாக்குறது, அதைப் பொது மக்களுக்குக் குறைந்த விலைக்குக் கொடுக்கிறதுனு கோயிலுக்கு வருஷம் முழுவதும் வருமானம் கிடைக்கும். பல அரிய வகை செடிகள், மூலிகைகள் மற்றும் மரங்களை அழியாமப் பாதுகாக்கலாம். இனிமேல் சித்திரை வெயிலுக்குத் தண்ணீர்ப் பந்தல், மோர்ப் பந்தல் திறப்ப வர்கள் தவறாமல் நாற்றுப் பண்ணைகளையும் திறக்கலாம். ஃபியூஸ் போனா தூக்கிப் போடற டியூப் லைட்டில்கூட 'உபயம்’னு எழுதிவைக்கிற நாம, பேரு சொல்ற மாதிரி ஒரு மரம் நட்டா ஏழேழு தலைமுறைக்குப் பிறகும் நம்ம சொந்தபந்தங்களுக்கு அந்த மரம் நம்ம பேரைக் காத்து நிக்கும் இல்லையா?'' அர்த்தத்தோடு சிரிக்கிறார் ரமேசு கருப்பையா!.

- ஆர்.சரண்