Tuesday, June 19, 2012

இரஞ்சன் குடி கோட்டை ....
பெரம்பலூர் மாவட்டம்.

நன்றி ;தினமணி...


வரலாற்றின் நினைவாய் வீட்டில் இருந்த ஓர் ஓவியம் ஒன்று உருக்குலைந்து போனது போன்று இருக்கிறது ரஞ்சன்குடி கோட்டை.இந்த ஊரை 'நஞ்சன் குடி' என்றும் மக்கள் அழைக்கிறார்கள்.சென்னையிலிருந்து  செல்லும் போது வலதுபுறத்தில் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் (NH-45) இருக்கிறது.பெரம்பலுரிலிருந்து 17  கி.மீ
வடக்காகவும்,இராமநத்தம்(தொழுதூர்)தெற்காக 8 கி.மீ. உள்ளது.பதினேழாம் நூற்றாண்டில்,'கருநாடகா நவாப்' பிடம் ஜாகிர்தாராக இருந்த ஒருவரால் கட்டப்பட்டது. 

மிக அழகாக வெட்டப்பட்ட கற்களை கொண்டு இதன் சுவர்கள் கட்டப்பட்டு உள்ளன.இக்கோட்டை மதில்கள் மூன்று அடுக்குகள் கொண்ட சுவர்களாக வெவ்வேறு உயரத்தில் உள்ளது.மேலிருந்து பார்க்கும் போது இக்கோட்டை அரைக்கோள வடிவத்தில் இருக்கும்.கோட்டை வெளிப்புறத்தில் மதில் சுவர்களை ஓட்டி அகழி இருக்கிறது,அகழிக்கு தண்ணீர் அருகில் உள்ள நீரோடையிலிருந்து கொண்டு வரப்படுகிறது.  


அகழி நிறைந்த பின்னர் நீர் வெளியேறி ஒரு சிறிய நீர்பிடிப்பு ஒன்றில் சேகரமாகிறது.இவ்வகழியில் பாதுகாப்பு கருதி முன்னர் முதலைகள் விடப்படிருக்கவேண்டும்.இக் கோட்டையின் உள்ளே இரண்டு மசூதிகள் இருக்கின்றது,மேலே ஒன்றும்,கீழாகாக ஒன்றும் உள்ளது,இதில் கீழே உள்ள மசூதியில் இப்போதும் வழிபாடு நடந்து வருகின்றது.ரஞ்சன்குடி கோட்டை கட்டிடகலையில் இரு சிறப்பான இடத்தை பெறுகின்றது.படிகளின் வழியாக மேலே ஏறிச் சென்றால் பேட்டை என்று குறிப்பிடப்படும் இடம் முன்பு போர் புரிந்த இடமாக இருக்க வேண்டும்.1751 ஆண்டு நடைபெற்ற வாலிகண்டபுரம் போரில்,இந்த கோட்டை ஒரு முதன்மையான பங்கு பெறுகின்றது.ஆங்கிலேயர்களுக்கும்,பிரான்சு நாட்டவருக்கும் தொடர்ந்து நடைப்பெற்ற போரில் இக்கோட்டையை கைப்பற்றுவது தான் வெற்றியை தீர்மானிக்கின்ற ஒன்றாக இருந்தது.ஆரம்பப்போரில் பிரான்சு வெற்றி பெற்றாலும்,பின்னர் ஆங்கிலேயர்களே வென்றனர்.

உச்சி மேல் இருக்கும் பகுதி 'கோட்டை மேடு' என்று அழைக்கப்படுகிறது.
தூரத்தில் இருந்து வரும் எதிரியை கவனிக்கவும்,பீரங்கி போன்ற ஆயுதம் கொண்டு குறி பார்க்கவும்,சுவர்களில் துளைகள் இடப்பட்டு உள்ளது.வெளிப்புறத்தில் இருந்து பார்த்தால்,சுவற்றின் துளைகள் வழியே தம்மை குறி வைப்பது எதிரிக்கு தெரியாது.  

இதைவிட எல்லாவற்றிலும் சிறப்பு, உச்சியில் சிறிய குளம் உள்ளது.இந்த குளத்து நீர் நவாபுகள் குளிக்கவோ,குடிக்கவோ பயன் பெற்றிருக்க வேண்டும்.இக்கோட்டைக்குள் குடியிருப்பு மண்டபங்கள் ,போர் கருவிகள் சேமிக்கும் இடங்கள்,குதிரை கொட்டடிகள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.ஆண்களையும்,பெண்களையும் இறக்கும் வரை சிறை வைக்கும் சிறைகள் இருந்திருக்கலாம் என்று வரலற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள் .பல்வேறு சுரங்கப்பாதைகள் இருந்ததற்கான அடையாலங்கள்
இருக்கின்றன. திருச்சிராப்பள்ளி அருகில் இருப்பதால்,அதற்க்கு தேவையான படைக்கலங்கள் இங்கிருந்து தான் சென்றிருக்க வேண்டும்.இவ்வாறு வரலாற்றில்,வரலாற்றின் போக்கை தீர் மானிக்கின்ற ஒரு இடமாக இருந்திருக்கின்றது ரஞ்சன்குடி கோட்டை.

இப்போது கோட்டையின் வெளியே மக்கள் குடி இருக்கும் ஊர் இருக்கின்றது.மீதி யாவும் பசுமை போர்த்திய வயல் வெளிகள் காணப்படுகிறது.இக்கோட்டை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்தியாவில் இருக்கும் நினைவுச் சின்னங்களில் இந்த நிறுவனத்தால் மிக மோசமாக பராமரிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாக இது தான் இருக்கும் என்று எண்ணுகிறோம்.இந்த இடத்தைப் பற்றி ஒரு சிறு குறிப்பு கூட இங்கே இல்லை.தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் பலகை கூட சேதமடைந்து பொய் உள்ளது.

அண்மையில் தான் முன்னாள் முதல்வர் கதை வசனத்தில் உருவான "பொன்னர் சங்கர்" என்ற திரை ப்படத்திற்க்கான அரங்க வேலைகள் முதல்வரின் ஆலோசனைப்படி நடை பெற்றதாக சொல்லப்பட்டது.இது முடிந்த பின்னராவது இதற்கு ஒரு விடிவு காலம் வருமென்று இப்பகுதி மக்கள் எதிர் பார்த் தார்கள்,இதுவரை எதுவும் இல்லை.தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மிக அருகில் உள்ளதால் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்க வாய்ப்புள்ளது.இது ஒரு வேலூர்,திருமயம் கோட்டை போன்று விளக்கம் பெற வேண்டிய ஒன்று.பெரம்பலூர் போன்ற பின்தங்கிய மாவட்டத்தில் உள்ள இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் சிதிலம் மடைந்து வருவது வருத்தமுடைய ஒன்று.

 இந்திய தொல்பொருள் ஆய்வு 
நிறுவனம்,தமிழ்நாடு சுற்றுலா கழகம்,மாவட்ட நிருவாகம் உடனடியாக சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் இல்லையேல் அந்த கிராம மக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்பதே மக்களின் கோபமாகவும்,குரலாகவும் உள்ளது.வேலுருக்கு ஒரு கோட்டை போன்றும்,திருச்சிராப்பள்ளிக்கு ஒரு மலைகோட்டை போன்றும்,பெரம்பலூருக்கு இந்த ரஞ்சன் குடி கோட்டை சிறப்பு சேர்க்க கூடிய ஒன்று.சிறப்பு சேர்க்குமா இந்த அதிகார வர்க்கம் ? 

No comments:

Post a Comment