Wednesday, October 20, 2010

தமிழர்கள் பார்வைக்கு..

தமிழ் நாடு +அரசு =தமிழ்நாட்டரசு 


இலக்கணம் ;ஒற்று இரட்டித்தல்:
​​

ஒற்​று​மிகுதலோடு சேர்த்து எண்ணத்தக்கது ஒற்று இரட்டித்தல் என்னும் இலக்கண விதியாகும்.​
 சோறு+பானை= சோறுப்பானை என்று எழுதுவதில்லை.​ சோற்றுப்பானை என்கிறோம்.​ ஆறு + வழி = ஆற்றுவழி என்கிறோம்.​ சோறு,​​ ஆறு என்பவற்றுள் ​(ற்+உ=று)​ உள்ள "ற்' மற்றுமொன்று கூடி வருவதால் ஒற்று இரட்டித்தல் என்றுரைக்கிறோம்.​ சோ+ற்+ற்+உ =(சோற்று)

ஒற்று இரட்டித்த பின் வலி ​(வல்லொற்று)​ மிகுந்து சோற்றுப் பானை என்றாகிறது.​ அடையாறு + இல் = அடையாற்றில் என இங்கும் ஒற்று இரட்டித்தல் வேண்டும்.​ அடையாறில் என்று எழுதுவது பிழை.​ ஆற்றில் வெள்ளம் வந்தது என்றுதானே சொல்லுகிறோம்.​ ஆறில் வெள்ளம் வந்தது என்று சொல்வதில்லையே.​ மாடு+சாணம்= மாட்டுச்சாணம் என்கிறோம்.​ வீடு + சோறு= வீட்டுச் சோறு என்கிறோம்.
​ இந்த இலக்கணத்தை மறக்க வேண்டாம்.

தமிழ்நாடு+ அரசு = தமிழ்நாட்டரசு என்றுதான் எழுத வேண்டும்.
​ தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் என்பது பிழை.​ தமிழ்நாட்டரசுப் போக்குவரத்துக் கழகம் என்பதே சரியானது.
​ தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் என்று பிழையற்ற தமிழில் ஒரு நிறுவனம் குறிக்கப்படும்போது,​​ தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஏன் வந்தது?​ தமிழ்நாடு அரசு ஏன் வந்தது?​ தமிழ்நாட்டரசு என்று மாற்றுக.​ கிணறு+தவளை= கிணற்றுத் தவளை. காடு +பாதை = காட்டுப்பாதை என்றெல்லாம் மக்கள் சரியாகச் சொல்லும்போது நாடு+அரசு= நாட்டரசு என்றுதானே எழுத வேண்டும்?

கட்டுப்பாடு+அறை = கட்டுப்பாட்டறை எனச் சொல்க.​ மேம்பாடு + திட்டம் = மேம்பாட்டுத்திட்டம் என்க.​ நம்நாடு + சட்டம் = நம்நாட்டுச் சட்டம் தானே.​ ​​


நன்றி ;தினமணி கதிர் .03/10/2010;. கவிக்கோ ஞானச்செல்வன் 

No comments:

Post a Comment