இயற்கையைக் காப்பதற்காக 'மழை - மண் - மரம் - மானுடம்’ என்ற அமைப்பை தனி ஒருவராய் நிறுவி தமிழகம் முழுதும் களப் பணியில் இயங்கிவருகிறார் இரமேசு கருப்பையா. இவர், தான் பிறந்து வளர்ந்த ஊரான ராமநத்தம் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.
’’கடலூர் மாவட்டத்தின் எல்லையில் இருக்கும் கடைக்கோடிக் கிராமம்தான் எங்கள் ஊர். சென்னையில் இருந்து தமிழகத்தின் தென் பகுதிக்குச் செல்லும்போது, நீங்கள் எங்கள் ஊரைக் கடந்துதான் செல்ல முடியும். இங்கு இருக்கும் அழகான வெள்ளாற்றங்கரையின் வடகரையில்தான் எங்கள் ஊர் உள்ளது. வடகரையில் கடலூர் மாவட்டம், தென்கரையில் பெரம்பலூர் மாவட்டம் அமைந்து இருப்பது இதன் சிறப்பு. ராமர் இந்த ஊரின் வழியாக சென்றதால்தான் ராமநத்தம் என்று பெயர் வந்தது என்று ஒரு நம்பிக்கையும் உண்டு. ஆனால், இந்தப் பெயரை தமிழ்ச் சொல் ஆய்வுக்கு உட்படுத்தியதில் நீர்ப் பிடிப்பும் நிலப்பிடிப்பும் உள்ள பகுதி என்று அர்த்தம் தெரியவந்தது.
புதிதாக நாம் குடியேறும் இடத்துக்கு அண்ணா நகர், பெரியார் நகர் என்று நாம் இன்று வைத்துக்கொண்டது போல இங்கு, குடியேறிய மக்கள் நத்தம் என்ற பெயருக்கு முன்னால் ராமன் என்ற பெயரைச் சேர்த்துக் கொண்டனர். அதுவே காலப்போக்கில் 'ராமநத்தம்’ ஆகிவிட்டது.
எங்கள் ஊரின் பெயர் ராமநத்தம் என்றாலும் தொழுதூர் என்று சொன்னால்தான் அனைவருக்கும் தெரியும். ஏனெனில், இங்கு இருந்து மேற்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தொழுதூர், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பிரபலமான ஊராக இருந்தது. ஊரின் மேற்குப் பக்கம் மழை பெய்தால் மட்டுமே, எங்கள் ஊரின் வெள்ளாற்றில் தண்ணீர் ஓடும். மற்ற நேரங்களில் இருக்காது. ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது அதில் அடித்துக்கொண்டுவரும் வைக்கோல் போர், தென்னை, பனை மரங்கள் போன்றவற்றை வேடிக்கை பார்ப்பதில் எங்களுக்கு அலாதி இன்பம். ஆற்றுப் பாலத்துக்கு அடியில் இருக்கும் நீர்த் தேக்கத்தின் வாய்க்கால்களில்தான் பள்ளிக்குப் போகும்போதும் வரும்போதும் குளிப்போம். நீச்சல் பயிற்சியை விளையாட்டாகவே அனுபவித்த அந்தப் பருவங்கள் அழகானவை.
என்னுடைய இரண்டாவது கருப்பை என்று என் ஊரில் உள்ள இலுப்பைத் தோப்பைச் சொல்லலாம். உள்நோக்கும் முகமாக என்னை நானே பார்த்துக்கொண்டதும் என் சிந்தனைகளைக் கிளை பரப்பி வளர்த்துக் கொண்டதும் இங்குதான். சுமார் 150 மரங்களைக்கொண்ட இந்தத் தோப்பு வெள்ளாற்றங்கரையில் பசுமையையும் குளுமையையும் ஒருசேர அள்ளித்தரும். தேர்வுக் காலத்தில் எங்களின் படிப்பிடமும் இங்குதான். காலையில் எழுந்தவுடன் புத்தகங்களை எடுத்துக்கொண்டு படிக்கச் செல்வோம். படித்துக் களைப்பாகிவிட்டால் சருகுகளாகக் கிடக்கும் இலுப்பை இலைகளைப் பரப்பி படுக்கையைத் தயார் செய்து படுத்துவிடுவோம்.
தாகம் எடுத்தால் அருகில் இருக்கும் ஆற்றுக்குச் சென்று கைகளால் மணலைத் தோண்டினால் ஊற்று நீர் பொங்கி வரும். அந்தத் தண்ணீரைக் குடிப்போம். அமைதியான சூழலில் படிக்கவும் தூங்கவுமாக எங்கள் பால்யத்தைப் பசுமையாக வைத்து இருந்த இலுப்பைத் தோப்பு என் தாத்தாவுக்குச் சொந்தமானது. இங்கு இருக்கும் மரங்களின் வேர் முடிச்சுகள் என் தாத்தாவின் கைரேகைகள். எனக்குள் இயற்கை ஆர்வத்தை விதைத்தது இந்த இலுப்பைத் தோப்புதான். இப்போதும் ஊருக்கு வந்தால், காலையில் கண் விழிக்கும் இடம் இதுதான்.
அப்போது மோட்டல் என்று சொல்லக் கூடிய 'வழி உணவகம்’ முதன்முதலில் எங்கள் ஊரில்தான் ஆரம்பித்தார்கள். சாலையோர உணவு விடுதிகளை முதன்முதலில் பார்த்தபோது அதிசயத்துப்போனேன். இந்த உணவு விடுதிகளால்தான் தொழுதூர்- ராமநத்தம் என்று ஊர் இருப்பதே பலருக்குத் தெரியவந்தது.
எங்கள் மக்கள் நெல், கம்பு, கேழ்வரகு போன்றவற்றை சாலையில் கொட்டித்தான் நெற்கதிர் அடிப்பார்கள். ஆனால், இப்போது நொடிக்கு ஒரு வாகனம் கடந்து செல்வதால், சாலையைக் கடப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. சுற்றுவட்டாரக் கிராம மக்கள் வேலை வாய்ப்புகளுக்காக எங்கள் ஊரில் இப்போது வந்து குடியேறிக் கொண்டு இருக்கிறார்கள். இரு வழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றிவிட்டார்கள். சாலையின் இருபுறமும் இருந்த புளியமரங்களை அழித்துவிட்டு சாலையின் நடுவில் செடிகள் நடுகிறது நம் அரசு. இந்த முரண்பாடுதான் என்னை முள்ளாய்த் தைக்கிறது. என் பால்யத்தில் புளிய மரங்களில் தொத்தித் திரிந்த குரங்குகள் இப்போது என்னவாயின என்றே தெரியவில்லை. புளிய மரத்தினை நம்பி வாழ்ந்த பல உயிரினங்கள் இன்று அழிந்துவிட்டன.
எங்கள் ஊரில் வீட்டுக்கு ஒருவர் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை
செய்பவர்களாக இருப்பார்கள். ஏனெனில் இது வானம் பார்த்த பூமி. மழை பெய்தால்தான் விவசாயம். அதனால், பிழைப்பைத்தேடி வெளிநாடு செல்பவர்கள் இங்கு அதிகம். இங்கு எட்டாவது படிக்கும் ஒவ்வொரு மாணவனும் வெளிநாட்டுக் கனவில்தான் படிக்கிறான். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் குறைந்தது பத்து பேராவது இங்கு இருந்து வெளிநாடு கிளம்புகிறார்கள். இது மகிழ்ச்சியான விஷயம் அல்ல... விவசாயம் செத்துவிட்டது என்று அர்த்தம்!
சந்திப்பு: ஜெ.முருகன்
படங்கள்: தேவராஜன்
No comments:
Post a Comment