''பாப்பா கேட்ட காக்க கேள்வி'
ஏதோ ஒரு பண்டிகை நாள்.அன்று ஊருக்கு செல்லாமல் சென்னையிலயே தங்கி விட்ட நண்பர்களை நண்பகல் விருந்துக்கு அழைத்து இருந்தார் நண்பர்.அவருக்கு சென்னையே பிறப்பிடம்.சென்றிருந்த நண்பர்களில் ஒருவர் குழந்தையோடு வந்திருந்தார்.எல்லோரும் பேசிக்கொண்டிருந்தோம்.உள்ளே ''படையல்'' வேலை நடந்து கொண்டிருந்தது.எல்லாம் முடிந்த பின்னர்,சாப்பிடுவதற்கு அமர்ந்தோம்.இலை போட்டு தண்ணீர் வைத்தாகிவிட்டது .
அந்த வீட்டை சேர்ந்த நண்பரின் அம்மா,எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தாச்சு,காக்காவுக்கு சோறு வைக்கலையே என்றார்.அட.. டா.. என்ற படி,அந்த வீட்டு நண்பர்,கொஞ்சம் சோறு எடுத்துக்கொண்டு வீட்டின் மாடிக்கு சென்று விட்டார் .பின்னர் வந்தவர் ,அப்பாடா..நல்ல வேளை நாம் சாப்பிடுமுன் காக்காவுக்கு சோறு வச்சாச்சு என்றார்.
அப்போது அந்த குழந்தை கேட்டது,
காக்காவுக்கு நீங்க சோறு வச்சிங்களே , தண்ணீர் வச்சிங்களா....?என்று ...எல்லோருக்கும் அது புதுமையாகவும்,மழலைத்தனமாகவும் இருந்ததை ரசித்தனர்.உண்மையில்
அதில் நடைமுறை உண்மை இருந்தததை உணர முடிந்தது.
நாம் என்றாவது இது குறித்து யோசித்தது உண்டா?சோறு வைக்கும் நாம் ஏன் தண்ணீர் வைப்பதில்லை?இந்த ''கட்டிட காட்டினில்''நதியை தேடி எங்க போகும்.
அப்போது தான் நினைவுக்கு வந்தது. நண்பர் ''சதீஷ் முத்து கோபால்'' சிட்டு குருவிக்கு தண்ணீர் வையுங்கள்.கம்பு தானியங்களை தூவுங்கள் என்றபடி அறிவுறுத்திவருவார்.அதை எப்படி அவர் தனது வீட்டில் செய்து வருகிறார் என்பது பற்றியும் புகைப்படம் இட்டு வருவார்.ஆமாம் இப்போது நாம் யாரும் சிறு தானியங்களை பயிர் இடுவதில்லை.அப்போது அதன் உணவை தான் அதற்கு இடவேண்டும்.
அப்படி இருக்கையில் காக்காவுக்கு ஏன் சோறிட வேண்டும்.மத நம்பிக்கையின் படி முன்னோர்கள் காக்கையின் வடிவில் வந்து உண்பதாக நம்பினார்கள்.அதை தாண்டிய ஏதோ ஒன்று இருப்பதாக பட்டது. (இல்லாமலும் இருக்கலாம்) காக்கை,கழுகு ஆகியவற்றை ''ஆகாயத் துப்புரவாளர்கள் ''என்று அழைப்பது உண்டு.ஏன் என்றால்
இவை பெரும்பாலும் இறந்த உயிரினங்களை உண்டு நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பதில் பெரும்பங்கு வைக்கிறது.இப்போது காக்கையை அழைப்பதன் நோக்கம் இதற்காகவும் இருக்கலாமா என்று எண்ண தோன்றுகிறது.
எது எப்படியோ ''பாப்பா கேட்ட காக்க கேள்வி'' நல்ல செயலை நோக்கி தள்ளியது.இனி காக்காவுக்கு சோறு வைக்கும் போது,இல்லை என்றானாலும் தண்ணியாவது வைப்போம் எப்போதும்.
No comments:
Post a Comment