Sunday, March 2, 2014

தோட்டத்திலே திருமணம்....புதிய வாழ்வியல் அக்டோபர் மாதம் -2013


தோட்டத்திலே திருமணம்

  இரு உயிர்களை இணைக்கும் உணர்வுப்பூர்வமான நிகழ்வு திருமணம். இன்று அது ஆபத்தான, அயர்ச்சி யூட்டும் செலவினமாக மாறிவிட்டது. இந்நிலையை மாற்ற நினைத்தேன். பசுமைத் திருமணம் என்கிற கருத்தை உருவாக்கினேன். எனக்கும் தமிழ் ஆசிரியை செங்கொடிக்குமான பந்தம் பசுமைத் திருமணத்தில் மலர்ந்தது. கடலூர் மாவட்டம் தொழுதூரில் உள்ள என் வீட்டுத் தோட்டமே திருமணத்துக்கான களம். திருமண அழைப்பிதழை கலை நயத்துடன், துண்டு பிரசுரமாக எளிமையாக தயாரித்தோம். ஓர் அழைப்பிதழுக்கான செலவு 30 பைசா மட்டுமே. என் தோட்டத்து தென்னங்கீற்றுகளே திருமணப் பந்தல். மாவிலை, பனங்குலை, ஈச்சங்குலை, தென்னங்குலை, வாழைத் தோரணங்கள் ஆகியவைத் தோட்டத்தை அலங்கரித்தன. பகல் நேரம் என்பதால் மின்சாரம் தேவைப்படவில்லை. மலர் மாலைகளுடன், மரச்சுருள் மாலையும் அணிந்துகொண்டோம். திருமணத்துக்கு மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சியின் தலைவர் வே. ஆனைமுத்து தலைமையில், பாவலரேறு பெருஞ்சித்திரனார் குடும்பத்தினர் முன்னிலை வகித்தனர். காலை விருந்து, வாழை இலையில் தேன் & தினை மாவு உருண்டை, தேன் & முக்கனிகள், வரகு அரிசி பொங்கல், நவதானிய அடை, நாட்டு காய்கறி அவியல். தவிர தோட்டத்தில் கம்பங்கூழ், கேழ்வரகு கூழ், இளநீர், சுக்குமல்லி தேநீர், பனை வெல்ல பானகம், நுங்கு வழங்கப்பட்டது. மதிய விருந்து இயற்கை உரத்தில் விளைவிக்கப்பட்ட அரிசி சோறு, நாட்டுக் காய்கறிகள், பருப்புக் குழம்பு, கம்பு தானிய தயிர் சாதம், கடைந்த கீரை, அவியல், துவையல், பனை வெல்லப்பருப்பு பாயசம் பரிமாறினோம். மதிய விருந்துக்கான எந்த ஒரு பதார்த்தத்திலும் எண்ணெய் ஒரு சொட்டுகூட பயன்படுத்தவில்லை. குடிக்க தெள்ளத் தெளிவாக இருக்கும் தோட்டத்து கிணற்று நீர். பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஒரு பக்கம் புத்தகக் கண்காட்சி நடந்தது. இன்னொரு பக்கம் அழிந்துவரும் மண்பாண்டக் கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மண்பாண்டக் கலைஞர்கள் மண்பாண்டங்களை செய்து காண்பித்தனர். காடா துணிப்பையில் கானுயிர் விழிப்புணர்வு கையேடுகளும் பழங்களும் வைத்து தாம்பூலம் வழங்கினோம். தவிர, அழிந்து வரும் இலுப்பை மரங்களை பாதுகாக்கும் வகையில் இலுப்பை மரக்கன்று களையும் அளித்தோம். இப்படி நாங்கள் தொடங்கி வைத்த பசுமைத் திருமணம் இப்போது எங்கள் மாவட்டத்தில் பிரபலம் அடைந்து வருகிறது. பகட்டுகளில் மூழ்கிக் கொண்டிருக்கும் மனித வளர்ச்சியின் அடுத்த கட்டம் எளிமையை நோக்கித் தான் இருக்கும். இயற்கைக்கும் நமக்கும் அறுபட்டுக்கிடக்கும் பந்தத்தை நாம் சீர் செய்தாக வேண்டும். பசுமைத் திருமணம் அப்படியானதொரு முயற்சியே. ஒருநாள் கொண்டாட்டத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்து கடனாளியாகும் முன் பசுமைத் திருமணங் களை பரிசீலனை செய்யுங்கள்.

சுற்றுச்சூழல் போற்றும் பசுமைத் திருமணங்கள்!.. DEC-25-2013,த இந்து தமிழ் ...



டி.எல். சஞ்சீவிகுமார்
  
1
பசுமைத் திருமணம் செய்துகொள்ளும் ரமேஷ் கருப்பையா - செங்கொடி தம்பதி, மணமேடை ஏறும் முன்பு மரக்கன்று நடுகின்றனர். அவர்களது கழுத்தில்.. மரச்சுருள் மாலை.
பசுமைத் திருமணம் செய்துகொள்ளும் ரமேஷ் கருப்பையா - செங்கொடி தம்பதி, மணமேடை ஏறும் முன்பு மரக்கன்று நடுகின்றனர். அவர்களது கழுத்தில்.. மரச்சுருள் மாலை.
கோடிக்கணக்கான ரூபாய் செல வழித்து ஆடம்பர திருமணங்கள் அரங்கேறிவரும் நிலையில் காந்திய பொருளாதாரத்தின் அடிப்படையில் பசுமைத் திருமணங்களை நடத்தி வரு கிறார் கடலூர் மாவட்டம், தொழுதூரைச் சேர்ந்த ரமேஷ் கருப்பையா.
இன்றைக்கு ஆடம்பரத் திருமணங்கள் என்கிற பெயரில் பட்டாசில் தொடங்கி பட்டாடை வரை படோபடம் செய்கிறார்கள். தினமும் கோடிக்கணக் கானோர் பட்டினி கிடக்கும் நிலையில் ஏராளமான உணவுகள் குப்பையில் கொட்டப்படுகின்றன. தேவைக்கு நுகர்வு என்பது போய் கெளரவத்துக்கு நுகர்வாகி விட்டது. இந்நிலையை மாற்ற பசுமைத் திருமணங்களை நடத்தி வருகிறார் ‘மழை, மண், மரம், மானுடம்’ அமைப்பை நடத்தி வரும் ரமேஷ் கருப்பையா.
சமத்துவத்துக்கான சுற்றுச்சூழல்
‘தி இந்து’விடம் அவர் பேசுகையில், “சமத்துவத்துக்கான சுற்றுச்சூழல் என்பதே எங்களது கொள்கை. இதைத் தான் காந்தியும் வலியுறுத்தினார். நிலத்தை, நீரை, காற்றை, கனிமத்தை கட்டுப் படுத்துவதில் - அதனை பங்கிடுவதில் பூமியில் நிலவும் போட்டியே இன்றைய சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு காரணம். ஒரு மரத்தின் பலனை மனிதன் தொடங்கி அனைத்து உயிரினங்கள் வரை தேவைக்கு ஏற்ப சமமாகப் பங்கிட்டுக் கொள்வது இயற்கை பொதுவுடமை. ஆனால், இங்கே அந்த மரத்தையே வெட்டுவதற்கு மனிதர்களுக்குள் போட்டியும் பொறாமையும் நிலவுகிறது. இதன் மூலம் மனிதன் எவ்வளவு ஆபத்தான திசையில் பயணிக்கிறான் என்பதை புரிந்துகொள்ளலாம்!
கௌரவத்துக்காக நுகரும் மனிதன்
உலகில் வேறு எந்த ஓர் உயிரினமும் தனது தேவையைத் தாண்டி நுகர்வது இல்லை. ஆனால், மனிதன் மட்டுமே கௌரவத்துக்காகவும், கர்வத்துக்காகவும் மிக அதிகமாக நுகர்கிறான். அவனது ஒவ்வொரு நுகர்விலும் பூமிப்பந்து அதிர்ந்து அடங்குகிறது. அவ்வாறான ஆபத்தான நுகர்வு கலாச்சாரங்களுள் ஒன்றாகிவிட்டது திருமணமும். அதனா லேயே பசுமைத் திருமணம் என்கிற கருத்துருவை உருவாக்கினோம். ஓர் இடத்துக்கான தேவைகளை அந்த இடத்தில் இருந்தே பூர்த்தி செய்துக் கொள்வது; சுற்றுச்சூழலை மாசுப்படுத் தாமல் இருப்பது; ஆடம்பரம் தவிர்ப்பது - இவையே பசுமைத் திருமணங்களின் அடிப்படை.
எனக்கும் என் மனைவி செங் கொடிக்கும் நடந்த திருமணம் பற்றி சொன்னால் பசுமைத் திருமணத்தைப் பற்றி புரிந்துக்கொள்வீர்கள். தொழுதூரில் இருக்கும் என் வீட்டு தோட்டமே திருமண களம். மா, பலா, வாழை, தென்னை, தேக்கு, கறிவேப்பிலை, எலுமிச்சை, ஏராளமான பறவைகள், உயிர்கள் நிரம்பிய ஒற்றைக் கேணி மற்றும் உறவுகள், நட்புகள் சூழ அங்கு என் திருமணம் நடந்தது.
திருமண அழைப்பிதழுக்கான செலவு 30 பைசா
என் திருமண அழைப்பிதழுக்கான செலவு 30 பைசாவுக்கும் குறைவே. என் தோட்டத்து தென்னங்கீற்றுகளே திருமணப் பந்தல் ஆனது. பகல் நேரம் என்பதால் மின்சாரம் தேவை இல்லை. வரவேற்பு பேனரும் தண்ணீர் சாயத்தால் எழுதப்பட்டது. அதை துவைத்தால் மண்ணுக்கு கேடு இல்லாத தண்ணீர் சாயம் கரைந்து போய்விடும். துணியை மறுபயன்பாடு செய்துகொள்ளலாம்; கொண்டோம்.
மணமேடை ஏறும் முன்பு இயற்கைக்கு நன்றி சொல்ல மரக்கன்றுகளை நட்டோம். உழவுக்கு வந்தனை செய்ய மண மேடையில் உழவு கலப்பை வைத்தோம். எங்களுக்கு மலர் மாலைகளுடன், தச்சு வேலை செய்யும்போது கிடைக்கும் மரச்சுருள்களை மாலையாக அணிவிக் கப்பட்டது. திருமண நிகழ்ச்சியில் நாங் களே மேடையை விட்டு இறங்கி, ஒவ்வொரு விருந்தினரிடமும் சென்று வாழ்த்துப் பெற்றோம். பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக புத்தகக் கண்காட்சியும், மண்பாண்டக் கலை கண்காட்சியும் நடத்தினோம். விருந்தினர்களுக்கு தாம்பூலப் பரிசாக மரக்கன்று, சூழலியல் கையேடு வழங்கினோம்.
இதுவரை கடலூர், ராமநாதபுரம், மண்டபம், சேலம், ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் 20-க்கும் மேற்பட்ட பசுமைத் திருமணங்களை நடத்தியுள்ளோம். வரும் பிப்ரவரி 2-ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ஒரு பசுமைத் திருமணத்தை நடத்துகிறோம். நீங்களும் வாருங்கள், வந்து வாழ்த்துங்களேன்” என்றார்.
பசுமைத் திருமணங்கள் பெரும்பாலும் கிராமங்களிலேயே நடத்தப்படுகின்றன. பாரம்பரிய சிறு தானியங்கள் மற்றும் இயற்கை விவசாய வகை உணவுகளே விருந்தாக வழங்கப்படுகிறது. காலை விருந்தாக தேன், தினை மாவு உருண்டை, முக்கனிகள், வரகு அரிசி பொங்கல், நவ தானிய அடை, நாட்டு காய்கறி அவியல், கம்மங்கூழ், கேழ்வரகு கூழ், இளநீர், சுக்குமல்லி தேநீர், பனை வெல்ல பானகம், நொங்கு வழங்குகிறார்கள். மதியம் சிகப்பு அரிசி சாதம், நாட்டு காய்கறிகள் குழம்பு, கம்பு தயிர் சாதம், கடைந்த கீரை, அவியல், துவையல், பனை வெல்லம் பருப்பு பாயாசம் வழங்கப்படுகிறது. சமையலுக்கு எண்ணெய் கிடையாது. பெரும்பாலும் கிராம நீர்நிலைகளின் நீரையே இயற்கை முறையில் சுத்திகரித்து குடிநீராக பரிமாறுகிறார்கள்.

http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article5499142.ece..

Thursday, January 23, 2014

பசுமைத் திருமணம் ...



வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் நன்றியறிதலோடே தொடங்குகிறது.வான் தந்த வாழ்வுக்கு யாம் செய்யும் சிறு அன்பு,மண்ணில் சில விதைகளை வேரூன்றச் செய்தலே.

தாம் வாழும் சமூகத்தின் மீது பேரன்பு கொண்ட,இராமநாதபுரம் முரளி-ஈசுவரி இணையர் தம் இல்வாழ்வினை தொடங்கிய பொழுதினில்.14-02-2013.

திருமண பரிசாக விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன ..


புத்தக வெளியீடு ...

விருத்தாசலத்தில் புத்தக வெளியீடு ..2012




தன் வாழ்வெல்லாம் வருடிய,வதைத்த,சமூக நேய உணர்வுகளையெல்லாம் சக மனிதர்களோடும்,பத்திரிக்கைகள் வாயிலாகவும் பகிர்ந்தபடியே வந்தார் ஒரு ஆசிரியர்.

அதை படித்தவர்களும்,பகிர்ந்துகொண்டவர்களும் ஒரு இலக்கியமாக உருவானதை,ஒரு தொகுப்பாக வெளியிட ஏற்பாடு செய்தனர். அப்படி உருவானது தான் ''புகை ஒற்றன்'' என்ற நூல்.
இதன் படைப்பாளி ஆறு.இளங்கோவன் அவர்கள்.(இடமிருந்து இரண்டாவது)உடன்
அண்ணன் பாவலர் அறிவுமதி,இயக்குனர்.வ.கௌதமன் ஆகியோர்.விருத்தாசலம் நகரில்...



Wednesday, October 10, 2012

வாகையூர் ஆறுமுகம் பெரியப்பா....,



ஆறுமுகம் பெரியப்பா....,
எப்போதும் உழைத்துக்கொண்டு இருக்கும் ஒரு சராசரி உழவர்.காலையில் எழுந்து ,ஆடு, மாடுகளுக்கு,தண்ணீர் வைத்து அவற்றை வேற்று இடத்தில பிடித்துக்கட்டி என்று இவற்றை மேய்ச்சலுக்கு அழைத்துக்கொண்டு போகும் வரை தேவையான வற்றை செய்துக்கொண்டு இருப்பார்.இவருக்கு தெரியாத வேலை என்று எதுவும் இருந்தது இல்லை.வயலுக்கு சென்றுவிட்டால்,உழுவது முதல்,வாய்க்கால்,வரப்பு செத்துவது வரை எல்லாவேலையையும் செய்வர்.வண்டி மாடு இப்போது இல்லை.
மோட்டர் வண்டி உழவு,எருவுக்கு பதில் செயற்கை உரம் என்று விவசாயத்தின் முகம் மாறிவிட்டது.எப்படித்தான் விவசாயத்தின் முகம் மாறினாலும்,காலம்,காலமாக ஒரு உழவனாக வாழ்ந்தவருக்கு தமக்கு தெரிந்த வேலைகளை விட்டு விடமுடியவில்லை.தென்னை மட்டையில் இருந்து கீற்று பின்னுவது,பனைமட்டை ஓலை கொண்டு கூரை மேய்வது,வைக்கோல் கொண்டு கயிறு திரிப்பது என்று எல்லாவற்றிலும்,தம் கைவண்ணத்தை காட்டிவிடுவார்.தேசிய ஊரக வேலைதிட்டத்தை,ஏரி வேலை என்று சொல்லும் பெரியப்பா,இப்போது அந்த வேலைக்கு சென்று வருகிறார்.இப்போது ஊருக்கு சென்றிருந்த போது  ஊரக வேலைதிட்டத்தை,முடித்துக்கொண்டு வந்தவர் வரும் போது ''அழிஞ்சி'' மரத்தின் சிறுகிளைகளை எடுத்து வந்திருந்தார்.
அவற்றை கொண்டு வெட்டியதை அள்ளும் கூடை என்பதால்,வெட்டிக்கூடை
என்று அழைக்கப்படும் என்று நினைக்கிறேன்,அதை செய்துகொண்டு இருந்தார்.

இதனையே தட்டையாக செய்தால் ''தட்டுக்கூடை''என்று அழைக்கப்படும்.இப்போது இதற்கு  பதில் அலுமினிய கூடை,பிளாஸ்டிக் கூடைகள் வந்துவிட்டன.இந்த  ''அழிஞ்சி'' மரத்தின் சிறுகிளைகளை உடனடியாக கொண்டு கூடைகள் முடையலாம்.இவை காய்ந்து விட்டால் அவற்றை ஊறவைத்து பின்னர் முடையலாம்.உழவுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்து முடிக்கும் திறமைகொண்டவர்.மண்வெட்டிக்கு கைப்பிடி செய்தல்,அரிவாளுக்கு கூர் தீட்டுதல் என அனைத்தும் தெரிந்தவர்.எப்போதும் அலுக்காமல் வேலை செய்துக்கொண்டே இருப்பவருக்கு, இதுவரை சக்கரை,மூட்டு வலி,குருதி கொதிப்பு என்று எதுவும் இல்லாத நிறைவானவர்.பேரபிள்ளைகளுக்கு விளையாட்டு பொருள்கள் செய்து கொடுத்து அவர்களை வியக்கச் செய்பவர்.

 ஒரு உழவராக இருக்க,வாழ பல வேலைகள் தெரிந்து இருக்கவேண்டி இருக்கிறது.உழவர்களின் உழைப்பை பெற எதுவும் தெரிந்து இருக்க தேவை இல்லை இந்த சமுகத்திற்கு.பணத்தை மட்டுமே வைத்திருந்ததால் போதுமானது என்று நினைக்கிறது.ஆனால் அவர்களைப்போல்,ஒரு உழவனைப்போல் ஒரு நாளேனும் மண்ணோடும்,மனிதர்களோடும் நெருக்கமாக,பிணைப்புடன்  வாழ முடியுமா....என்று தெரியவில்லை ?. 
 


Friday, September 28, 2012

இனிப்பான இலுப்பை ....... பசுமை விகடன் 25/09/2012


ஒரு காலத்தில் கோயிலும், இலுப்பைத் தோப்புகளும் இல்லாத ஊர்களையே பார்க்க முடியாது. ஆனால், இன்றைக்குத் தேடினாலும் கிடைக்காது எனும் அளவுக்கு... அற்றுப் போய்விட்டன, இலுப்பை மரங்கள். இதற்கு நடுவே பாரம்பரியத்தைக் கைவிடாமல், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் சில கிராமங்களில் மட்டும் இன்றைக்கும் இலுப்பை வனங்களைப் பராமரித்து வருகிறார்கள். கடலூர் மாவட்டம், ராமநத்தம் கிராமமும் அதில் ஒன்ற
ு. இங்கே கோயிலுக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தில், இலுப்பை மரங்களை ஊர் பொதுவில் பராமரித்து வருகின்றனர் மக்கள்!

உச்சிவெயில் உச்சந்தலையில் இறங்கும் மதியவேளையில், அந்த இலுப்பை வனத்துக்குள் நுழைந்தோம். அங்கே நமக்காகக் காத்திருந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம், ''இங்க 100 வருஷத்துக்கு மேல இந்த இலுப்பைத் தோப்பைக் காப்பாத்திட்டு வர்றோம். வெள்ளக்காரங்க ஆட்சியில 1918-ம் வருஷம், வெள்ளாத்தாங்கரைக்கு பக்கத்துல இருக்கற வெலிங்டன் (எமன் ஏரி) ஏரிக்கு தண்ணீர் கொண்டுபோக, வாய்க்கால் வெட்டினாங்க. அப்ப இந்த இலுப்பைத் தோப்பு அழிஞ்சுடக் கூடாதுனு எங்க பகுதியைச் சேர்ந்த பலரும் தங்களோட சொந்த நிலத்தைக் கொடுத்து, வாய்க்கால் வெட்டிக்கச் சொல்லியிருக்காங்க. அதுக்குப் பிறகு, 1950-ம் வருஷம் வாக்குல கண்ணன்ங்கிறவர் கூடுதலா இலுப்பைக் கன்னுங்களை நட்டு... ஆடு, மாடுக கடிக்காம காப்பாத்தி இந்த தோப்பை இன்னும் பெரிசாக்கியிருக்கார். அவரோட, நினைவா தோப்போட ஒரு பகுதியை 'கண்ணுத் தோப்பு'னுதான் எல்லாரும் கூப்பிடறோம். இதெல்லாம்தான் இன்னிவரைக்கும் எங்க ஊர் மக்களுக்கு இலுப்பைத் தோப்பு மேல தனிப்பாசத்தை உருவாக்கி வெச்சுருக்கு'' என்று உருகி உருகிச் சொன்னார்.


உணவாகும் இலுப்பைப் பூ !

கூடவே நின்றிருந்த ரெங்கராஜ், ''இந்த நிலம் விநாயகர் கோயிலுக்குச் சொந்தமானது. இங்கிருக்கும் மரங்களை கோயில் தர்மகர்த்தாதான் நிர்வகித்து வருகிறார். மரத்தில் ஒவ்வொரு ஆண்டும், தை மாதம் இலைகள் கொட்ட ஆரம்பித்து, பங்குனி மாதக் கடைசியில் பூ விட்டு, சித்திரையில் பிஞ்சு இறங்க ஆரம்பித்து, ஆவணி-புரட்டாசியில் இலுப்பைக் கொட்டைகள் கிடைக்கும். ஊரில் உள்ளவர்கள், கொட்டைகளைப் பொறுக்கி கோயிலில் கொடுப்பார்கள். அதற்கு உரிய சம்பளம், கொட்டைகளாவே கொடுக்கப்படும். வருஷத்துக்கு ஒருமுறை மரத்துக்கு 100 கிலோ அளவுக்கு கொட்டை கிடைக்கும். பொறுக்குக் கூலியாகக் கொடுத்தது போக, மீதியிருக்கும் கொட்டைகளை எண்ணெய் ஆட்டி, ஊர்ல இருக்கும் ஐந்து கோயிலுக்கும் பயன்படுத்தி வருகிறோம். பூக்கொட்டும்போது, இலைகளைக் கூட்டி ஓரமா தள்ளி வைத்துவிட்டு, தரமான பூக்களைச் சேகரித்து உணவு மற்றும் மருந்துக்கு மக்கள் பயன்படுத்துகிறார்கள்'' என்று சொன்னார்.     


                                   


களைப்பைப் போக்கும் களிசட்டிக்காய் !

அடுத்தாக, ''இலுப்பைத் தொட்டி கட்டினா... தாய்மார்களுக்கு பால் நல்லா சுரக்கும்னு சொல்வாங்க'' என்று இலுப்பையின் பெருமை பேசிய செல்லம்மா, ''சீசன்ல... காலையிலயும், சாய்ந்தரமும் கொட்டை பொறுக்க போவோம். கூலியா கிடைக்கற கொட்டைகளை எண்ணெய் வியாபாரிகக்கிட்ட கொடுத்துட்டு, அவர்கிட்ட இருந்து எண்ணெய் வாங்கிக்குவோம். நாலுபடி கொட்டைகளைக் கொடுத்தா... ஒரு படி எண்ணெய் கொடுப்பார். அந்த எண்ணெயில பலகாரம் செய்றது, விளக்கு எரிக்கறது, குழம்பு தாளிக்கறதுனு எல்லாத்துக்கும் பயன்படுத்துவோம். இலுப்பை எண்ணெயில சமைச்சா மணமாவும், சுவையாவும் இருக்கும்.

பூ சீசன்ல, கொட்டுற பூவையெல்லாம் பொறுக்கிட்டு வந்து, அதுகூட உப்பு, புளி, மிளகாய், கொத்தமல்லி சேர்த்து வறுத்து அரைச்சு, சின்னச் சின்ன உருண்டையா பிடிச்சு வெச்சுடுவோம். இந்த உருண்டைகளை களிசட்டிகாய்னு சொல்லுவோம். வயக்காட்டுல வேலை பார்க்குறப்ப, இதுல ரெண்டு உருண்டைய தின்னுட்டு தண்ணியைக் குடிச்சுட்டு வேலையைப் பார்த்தா... களைப்பு இல்லாம இருக்கும். இந்த உருண்டை, பிள்ளைங்களுக்கு நல்ல தின்பண்டமாவும் இருக்கும். குளிக்கறப்ப இலுப்பைப் பிண்ணாக்கைப் பொடியாக்கி தலையில தேய்ச்சு குளிப்போம். பேன், பொடுகுத் தொல்லையே இல்லாம ஓடிப்போயிடும்'' என்று சொன்னார்.

தலைமுறைகளைத் தாண்டிய பலன் ! 



இலுப்பைத் தோப்புகள் பற்றி ஆய்வுகள் செய்து வரும் அதே ஊரைச் சேர்ந்த ரமேசு கருப்பையா, ''முன்னோர்கள், இலுப்பைத் தோப்பை உருவாக்கியதற்கு சமூகப் பொருளாதாரக் காரணங்கள் நிறையவே இருக்கின்றன. பொது இடங்களில் மரங்களை உருவாக்க நினைத்தவர்கள் மா, பலா, தென்னை, தேக்கு, ஆல், அரசு, அத்தி போன்ற மரங்களை உருவாக்கி இருக்கலாம். ஆனால், தலைமுறை கடந்தும் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இலுப்பைத் தோப்புகளை, தாங்கள் குடியேறிய பகுதிகளில் உருவாக்கி இருக்கின்றனர்.

மண்ணெண்ணெய், மின்சாரம் ஆகியவை பயன்பாட்டுக்கு வராத காலத்திலேயே இலுப்பைத் தோப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதன் எண்ணெயை விளக்கெரிக்க முக்கியமாகப் பயன்படுத்தியுள்ளனர். பூவை சர்க்கரை எடுப்பதற்கும், சாராயம் காய்ச்சுவதற்கும் பயன்படுத்தியிருக்கிறார்கள். பிண்ணாக்கை நிலத்துக்கு உரமாகப் பயன்படுத்தியுள்ளனர்.

கடலூர் மாவட்ட எல்லையில் வெள்ளாறு நுழையும் இடத்தில இருந்து விருத்தாசலம் வரை, சுமார் ஐம்பது கிலோமீட்டருக்கு ஆற்றின் இரண்டு பக்கமும் இலுப்பை மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டுள்ளன. இந்த மரங்களை சில ஊர்களில் முற்றாக அழித்து விட்டனர்.

இந்தப் பழங்களை நம்பி, அரிய உயிரினமான பழந்திண்ணி வெளவால் இருக்கிறது. இம்மரங்கள் மழைக்காலத்தில் பழங்களைத் தருவதால், பழந்திண்ணி வெளவால் இனம், இலுப்பைத் தோப்புகளில் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாகக் காணப்படுகின்றன. இலுப்பை மரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டால், பழந்திண்ணி வெளவால் இனமும் அழிக்கப்பட்டு விடும். இந்த மரம் அழிந்து விடக்கூடாது என்பதற்காக, இதன் கன்றுகளை பலருக்கும் நான் இலவசமாகக் கொடுத்து வருகிறேன்'' என்றார் உற்சாகமாக!

இலுப்பையைக் காக்கும் இந்த கிராமத்துக்கு பசுமை வணக்கம் !

--------------------------------------------------------------------------------

முழுக்க முழுக்க மருந்து!

இலுப்பையின் மருத்துவ குணங்கள் பற்றி பேசிய இதேபகுதியில் இருக்கும் பெரங்கியம் கிராமத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் வரதராஜன், ''முழுக்க முழுக்க மருத்துவ குணம் நிறைஞ்ச மரங்கள்ல இலுப்பைக்கு முக்கிய இடமிருக்கு. இலுப்பைப் பூவுல குழம்பு வெச்சும் சாப்பிடலாம். இதனால நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். சர்க்கரை வியாதி உள்ளவங்க, இலுப்பை எண்ணெயில சமைச்ச உணவை சாப்பிடும்போது, பக்கவிளைவு இருக்காது. சித்த மருந்து தயாரிப்புல, கூட்டுப்பொருளா இந்த எண்ணெயைப் பயன்படுத்தறாங்க. இலுப்பை வேர், நாள்பட்ட ஆறாதப் புண், பசி இல்லாமை, காய்ச்சல், தேகச் சோர்வு இதுக்கெல்லாம் நல்ல மருந்து. இலுப்பைப் பிண்ணாக்குல புகைபோட்டா, கொசு பிரச்னை இருக்காது. மேலும், இலுப்பைப் பிண்ணாக்கைப் பொடியாக்கி குளியலுக்குப் பயன்படுத்தலாம். சேற்றுப்புண், விரை வீக்கம் இதுக்கெல்லாம் மருந்தாவும் பயன்படுத்தலாம்'' என்று சொன்னார்.........

Monday, September 3, 2012

ஆடிப்போன ஆவணி,ஆளை மயக்கும் தாவணி ...பாட்டு கீட்டு பாட முடியாது.ஆடியும் போச்சுன்னா விவசாயிக்கு வெறும் துணி..தான். .



                            


                            
படம்-இடம் வாகையூர் கிராமம்.31-08-2012.


ஆடி மாசம்,மழை பெய்ஞ்சா விதைக்கலாம்னு காத்திருந்த பெரியாப்பா,மழை வராதது கண்டு வெறுத்து போனார்.இருந்தாலும் ஒரு தூறல் விழுந்த மறுநாள்,கலப்பைய பூட்டினார்.ஒரு அடி உழவு ஓட்டி,எருவை கலைச்சு விட்டால்,அடுத்து 
ஒரு நல்ல மழை பேயும் நாளில் விதைத்தால் மட்டும் போதும், பயிறு நல்ல கிளம்பும் ,என்று காட்டுக்கு போனார்.எல்லா வேலையும் முடிச்சு வரும் வேளையில் ஒரு பட்டு போன ''நுணா'' மரத்தின் வேரை கிளற அங்கே மண்ணையும்,மரத்தையும் அறிச்சபடி கரையான் கிடந்துச்சி.....அட என கொஞ்சம் மண்ணோடு,கரையன்களையும் அள்ளிவந்து கோழி குஞ்சுகளுக்கு போட்டார்.
அத தான் கோழி குஞ்சுக கொத்தி கொத்தி தின்னுதுக.மழை வர்ற வரை மத்த வேலைகள பாக்க வேண்டியதுதான்.

நாம climate change,Global warming ன்னு பேசிக்கிட்டு Facebooka கிழ்ச்சிகிட்டு இருக்கலாம்.
ஆடிப்போன ஆவணி,ஆளை மயக்கும் தாவணி ...பாட்டு கீட்டு பாட முடியாது.
ஆடியும் போச்சுன்னா விவசாயிக்கு வெறும் துணி..தான்.