தோட்டத்திலே திருமணம்
இரு உயிர்களை இணைக்கும் உணர்வுப்பூர்வமான நிகழ்வு திருமணம். இன்று அது ஆபத்தான, அயர்ச்சி யூட்டும் செலவினமாக மாறிவிட்டது. இந்நிலையை மாற்ற நினைத்தேன். பசுமைத் திருமணம் என்கிற கருத்தை உருவாக்கினேன். எனக்கும் தமிழ் ஆசிரியை செங்கொடிக்குமான பந்தம் பசுமைத் திருமணத்தில் மலர்ந்தது. கடலூர் மாவட்டம் தொழுதூரில் உள்ள என் வீட்டுத் தோட்டமே திருமணத்துக்கான களம். திருமண அழைப்பிதழை கலை நயத்துடன், துண்டு பிரசுரமாக எளிமையாக தயாரித்தோம். ஓர் அழைப்பிதழுக்கான செலவு 30 பைசா மட்டுமே. என் தோட்டத்து தென்னங்கீற்றுகளே திருமணப் பந்தல். மாவிலை, பனங்குலை, ஈச்சங்குலை, தென்னங்குலை, வாழைத் தோரணங்கள் ஆகியவைத் தோட்டத்தை அலங்கரித்தன. பகல் நேரம் என்பதால் மின்சாரம் தேவைப்படவில்லை. மலர் மாலைகளுடன், மரச்சுருள் மாலையும் அணிந்துகொண்டோம். திருமணத்துக்கு மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சியின் தலைவர் வே. ஆனைமுத்து தலைமையில், பாவலரேறு பெருஞ்சித்திரனார் குடும்பத்தினர் முன்னிலை வகித்தனர். காலை விருந்து, வாழை இலையில் தேன் & தினை மாவு உருண்டை, தேன் & முக்கனிகள், வரகு அரிசி பொங்கல், நவதானிய அடை, நாட்டு காய்கறி அவியல். தவிர தோட்டத்தில் கம்பங்கூழ், கேழ்வரகு கூழ், இளநீர், சுக்குமல்லி தேநீர், பனை வெல்ல பானகம், நுங்கு வழங்கப்பட்டது. மதிய விருந்து இயற்கை உரத்தில் விளைவிக்கப்பட்ட அரிசி சோறு, நாட்டுக் காய்கறிகள், பருப்புக் குழம்பு, கம்பு தானிய தயிர் சாதம், கடைந்த கீரை, அவியல், துவையல், பனை வெல்லப்பருப்பு பாயசம் பரிமாறினோம். மதிய விருந்துக்கான எந்த ஒரு பதார்த்தத்திலும் எண்ணெய் ஒரு சொட்டுகூட பயன்படுத்தவில்லை. குடிக்க தெள்ளத் தெளிவாக இருக்கும் தோட்டத்து கிணற்று நீர். பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஒரு பக்கம் புத்தகக் கண்காட்சி நடந்தது. இன்னொரு பக்கம் அழிந்துவரும் மண்பாண்டக் கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மண்பாண்டக் கலைஞர்கள் மண்பாண்டங்களை செய்து காண்பித்தனர். காடா துணிப்பையில் கானுயிர் விழிப்புணர்வு கையேடுகளும் பழங்களும் வைத்து தாம்பூலம் வழங்கினோம். தவிர, அழிந்து வரும் இலுப்பை மரங்களை பாதுகாக்கும் வகையில் இலுப்பை மரக்கன்று களையும் அளித்தோம். இப்படி நாங்கள் தொடங்கி வைத்த பசுமைத் திருமணம் இப்போது எங்கள் மாவட்டத்தில் பிரபலம் அடைந்து வருகிறது. பகட்டுகளில் மூழ்கிக் கொண்டிருக்கும் மனித வளர்ச்சியின் அடுத்த கட்டம் எளிமையை நோக்கித் தான் இருக்கும். இயற்கைக்கும் நமக்கும் அறுபட்டுக்கிடக்கும் பந்தத்தை நாம் சீர் செய்தாக வேண்டும். பசுமைத் திருமணம் அப்படியானதொரு முயற்சியே. ஒருநாள் கொண்டாட்டத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்து கடனாளியாகும் முன் பசுமைத் திருமணங் களை பரிசீலனை செய்யுங்கள்.
No comments:
Post a Comment