Showing posts with label ஓவியக் கவிதை மரபு. Show all posts
Showing posts with label ஓவியக் கவிதை மரபு. Show all posts

Wednesday, July 27, 2011

ஓவியக் கவிதை மரபு - Thanks to DINAMANI.27/07/2011.





தமிழின் கவிதை மரபு 2,000 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்தது. கவிஞர்கள் காப்பியங்களை கவிதை மரபில் உருவாக்கியதால், கம்பர் போன்ற கவிஞர்களை மன்னர்களுக்கு இணையாக கவிச் சக்கரவர்த்தி என்று அழைத்து மக்கள் கொண்டாடினர்.

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் போன்ற சமயக் குரவர்களால் பதிகம் பெற்றும், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், திருமழிசை ஆழ்வார் போன்றோரால் பாசுரம் பெற்றும் பெருமை வாய்ந்த கோயில்கள் இன்றும் சிறப்புடன் திகழ்கின்றன.

இந்தக் கவிதை மரபில் இசை, பாடல், கீர்த்தனை, திரைப்படப் பாடல்கள் போன்ற எண்ணற்ற வகைகள் இருந்தாலும், தமிழர்களிடையே கவிதை மரபு ஓவியக் கவிதைகளாக இருப்பதைத்தான் அனைவரும் வரவேற்கின்றனர். 



இதுகுறித்து கலை விமர்சகரும், இலக்கிய இயக்கத்தின் நிறுவனருமான கலை விமர்சகர் தேனுகா கூறியது:

கவிதை மரபில் பல காப்பியங்கள் உருவாகியுள்ளன. கவிதை என்பது எழுத்துப் பிரதியாகவும், வாய்மொழிப் பிரதியாகவுமே இன்றளவும் காணப்படுகிறது.
கவிதை ஓவிய வடிவிலான கவிதையாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் மாற்றி எழுதப்பட்டுள்ளது. தமிழறிஞர் உ.வே.சா. இக் கவிதை ஓலைச் சுவடிகளை மிகச் சிரமப்பட்டு தேடி சேகரித்து தமிழுக்கு பெருமை சேர்த்தார்.


திருமங்கையாழ்வார், திருஞானசம்பந்தர் எழுதிய திருவெழுக்கூற்றிருக்கை என்னும் ஓவியக் கவிதைகள் ஒன்றிலிருந்து தொடங்கி ஏழு வரை முடிந்து, மீண்டும் ஏழிலிருந்து தொடங்கி ஒன்றில் முடியும் விசித்திரமான தேர் வடிவில் அமைக்கப்பட்ட ஓவியக் கவிதைகளாகும்.



திருமங்கையாழ்வார் எழுதிய திருவெழுக்கூற்றிருக்கை கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் அமைந்துள்ளது. சுவாமிமலையில் முருகன் மீது அருணகிரிநாதர் பாடிய திருவெழுக்கூற்றிருக்கையை இக் கோயிலில் ஏராளமான தமிழ் அறிஞர்கள் பார்த்து வருகின்றனர். நான்கும் நான்குமாக எட்டு பாம்புகள் பிணைந்தது போன்ற வடிவில் அமைக்கப்பட்ட அஷ்ட நாக பந்தம், அழகிய தமிழ் ஓவியக் கவிதையாகும். முரசு போன்ற அமைப்பில் உள்ள முரச பந்தம், மயில் போன்ற வடிவில் அமைக்கப்பட்ட மயூர பந்தம், மாலை மாற்றிக்கொள்வதைப் போல எழுதப்பட்ட மாலை மாற்று போன்ற ஓவியக் கவிதை மரபு தமிழரின் கவிதைக்கு பெருமை சேர்க்கக் கூடியதாகும்.


தமிழின் எண்ணற்ற கவிதை மரபில் ஓவியக் கவிதை மரபை இன்றும் குழந்தைகள்கூட கண்டு ரசிப்பதுடன், இதுபோன்ற ஓவியக் கவிதைகளை அவர்களும் எழுதி விடவும் முடியும்.

கவிதைக்கான நோபல் பரிசு பெற்ற எஸ்ரா பெüண்ட் ஆங்கிலத்திலும், இந்தியாவில் தாகூர் வங்க மொழியிலும் ஓவியக் கவிதைகளை எழுதியுள்ளனர். சிறிய ஓடை ஓடுவது போன்ற வடிவில் ரஷிய மொழியில் மாயகாவ்ஸ்கியும், பிரெஞ்சு மொழியில் ஃபார்க், சீன மொழியில் லூசூன், போன்றோர் சித்திரக் கவி எனப்படும் ஓவியக் கவிதைகளை எழுதி கவிதை உலகுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.உலகின் பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்களில் உள்ள இலக்கியத் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழக அரசின் தமிழ்த் துறை பேராசிரியர்கள், முனைவர் பட்டம் பெறும் மாணவர்கள் உலகளாவிய ஓவியக் கவிதை மரபை தமிழ் மரபோடு ஒப்பிட்டு ஆவணப்படுத்த வேண்டும்' என்றார் தேனுகா.