Sunday, March 2, 2014

தோட்டத்திலே திருமணம்....புதிய வாழ்வியல் அக்டோபர் மாதம் -2013


தோட்டத்திலே திருமணம்

  இரு உயிர்களை இணைக்கும் உணர்வுப்பூர்வமான நிகழ்வு திருமணம். இன்று அது ஆபத்தான, அயர்ச்சி யூட்டும் செலவினமாக மாறிவிட்டது. இந்நிலையை மாற்ற நினைத்தேன். பசுமைத் திருமணம் என்கிற கருத்தை உருவாக்கினேன். எனக்கும் தமிழ் ஆசிரியை செங்கொடிக்குமான பந்தம் பசுமைத் திருமணத்தில் மலர்ந்தது. கடலூர் மாவட்டம் தொழுதூரில் உள்ள என் வீட்டுத் தோட்டமே திருமணத்துக்கான களம். திருமண அழைப்பிதழை கலை நயத்துடன், துண்டு பிரசுரமாக எளிமையாக தயாரித்தோம். ஓர் அழைப்பிதழுக்கான செலவு 30 பைசா மட்டுமே. என் தோட்டத்து தென்னங்கீற்றுகளே திருமணப் பந்தல். மாவிலை, பனங்குலை, ஈச்சங்குலை, தென்னங்குலை, வாழைத் தோரணங்கள் ஆகியவைத் தோட்டத்தை அலங்கரித்தன. பகல் நேரம் என்பதால் மின்சாரம் தேவைப்படவில்லை. மலர் மாலைகளுடன், மரச்சுருள் மாலையும் அணிந்துகொண்டோம். திருமணத்துக்கு மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சியின் தலைவர் வே. ஆனைமுத்து தலைமையில், பாவலரேறு பெருஞ்சித்திரனார் குடும்பத்தினர் முன்னிலை வகித்தனர். காலை விருந்து, வாழை இலையில் தேன் & தினை மாவு உருண்டை, தேன் & முக்கனிகள், வரகு அரிசி பொங்கல், நவதானிய அடை, நாட்டு காய்கறி அவியல். தவிர தோட்டத்தில் கம்பங்கூழ், கேழ்வரகு கூழ், இளநீர், சுக்குமல்லி தேநீர், பனை வெல்ல பானகம், நுங்கு வழங்கப்பட்டது. மதிய விருந்து இயற்கை உரத்தில் விளைவிக்கப்பட்ட அரிசி சோறு, நாட்டுக் காய்கறிகள், பருப்புக் குழம்பு, கம்பு தானிய தயிர் சாதம், கடைந்த கீரை, அவியல், துவையல், பனை வெல்லப்பருப்பு பாயசம் பரிமாறினோம். மதிய விருந்துக்கான எந்த ஒரு பதார்த்தத்திலும் எண்ணெய் ஒரு சொட்டுகூட பயன்படுத்தவில்லை. குடிக்க தெள்ளத் தெளிவாக இருக்கும் தோட்டத்து கிணற்று நீர். பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஒரு பக்கம் புத்தகக் கண்காட்சி நடந்தது. இன்னொரு பக்கம் அழிந்துவரும் மண்பாண்டக் கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மண்பாண்டக் கலைஞர்கள் மண்பாண்டங்களை செய்து காண்பித்தனர். காடா துணிப்பையில் கானுயிர் விழிப்புணர்வு கையேடுகளும் பழங்களும் வைத்து தாம்பூலம் வழங்கினோம். தவிர, அழிந்து வரும் இலுப்பை மரங்களை பாதுகாக்கும் வகையில் இலுப்பை மரக்கன்று களையும் அளித்தோம். இப்படி நாங்கள் தொடங்கி வைத்த பசுமைத் திருமணம் இப்போது எங்கள் மாவட்டத்தில் பிரபலம் அடைந்து வருகிறது. பகட்டுகளில் மூழ்கிக் கொண்டிருக்கும் மனித வளர்ச்சியின் அடுத்த கட்டம் எளிமையை நோக்கித் தான் இருக்கும். இயற்கைக்கும் நமக்கும் அறுபட்டுக்கிடக்கும் பந்தத்தை நாம் சீர் செய்தாக வேண்டும். பசுமைத் திருமணம் அப்படியானதொரு முயற்சியே. ஒருநாள் கொண்டாட்டத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்து கடனாளியாகும் முன் பசுமைத் திருமணங் களை பரிசீலனை செய்யுங்கள்.

சுற்றுச்சூழல் போற்றும் பசுமைத் திருமணங்கள்!.. DEC-25-2013,த இந்து தமிழ் ...



டி.எல். சஞ்சீவிகுமார்
  
1
பசுமைத் திருமணம் செய்துகொள்ளும் ரமேஷ் கருப்பையா - செங்கொடி தம்பதி, மணமேடை ஏறும் முன்பு மரக்கன்று நடுகின்றனர். அவர்களது கழுத்தில்.. மரச்சுருள் மாலை.
பசுமைத் திருமணம் செய்துகொள்ளும் ரமேஷ் கருப்பையா - செங்கொடி தம்பதி, மணமேடை ஏறும் முன்பு மரக்கன்று நடுகின்றனர். அவர்களது கழுத்தில்.. மரச்சுருள் மாலை.
கோடிக்கணக்கான ரூபாய் செல வழித்து ஆடம்பர திருமணங்கள் அரங்கேறிவரும் நிலையில் காந்திய பொருளாதாரத்தின் அடிப்படையில் பசுமைத் திருமணங்களை நடத்தி வரு கிறார் கடலூர் மாவட்டம், தொழுதூரைச் சேர்ந்த ரமேஷ் கருப்பையா.
இன்றைக்கு ஆடம்பரத் திருமணங்கள் என்கிற பெயரில் பட்டாசில் தொடங்கி பட்டாடை வரை படோபடம் செய்கிறார்கள். தினமும் கோடிக்கணக் கானோர் பட்டினி கிடக்கும் நிலையில் ஏராளமான உணவுகள் குப்பையில் கொட்டப்படுகின்றன. தேவைக்கு நுகர்வு என்பது போய் கெளரவத்துக்கு நுகர்வாகி விட்டது. இந்நிலையை மாற்ற பசுமைத் திருமணங்களை நடத்தி வருகிறார் ‘மழை, மண், மரம், மானுடம்’ அமைப்பை நடத்தி வரும் ரமேஷ் கருப்பையா.
சமத்துவத்துக்கான சுற்றுச்சூழல்
‘தி இந்து’விடம் அவர் பேசுகையில், “சமத்துவத்துக்கான சுற்றுச்சூழல் என்பதே எங்களது கொள்கை. இதைத் தான் காந்தியும் வலியுறுத்தினார். நிலத்தை, நீரை, காற்றை, கனிமத்தை கட்டுப் படுத்துவதில் - அதனை பங்கிடுவதில் பூமியில் நிலவும் போட்டியே இன்றைய சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு காரணம். ஒரு மரத்தின் பலனை மனிதன் தொடங்கி அனைத்து உயிரினங்கள் வரை தேவைக்கு ஏற்ப சமமாகப் பங்கிட்டுக் கொள்வது இயற்கை பொதுவுடமை. ஆனால், இங்கே அந்த மரத்தையே வெட்டுவதற்கு மனிதர்களுக்குள் போட்டியும் பொறாமையும் நிலவுகிறது. இதன் மூலம் மனிதன் எவ்வளவு ஆபத்தான திசையில் பயணிக்கிறான் என்பதை புரிந்துகொள்ளலாம்!
கௌரவத்துக்காக நுகரும் மனிதன்
உலகில் வேறு எந்த ஓர் உயிரினமும் தனது தேவையைத் தாண்டி நுகர்வது இல்லை. ஆனால், மனிதன் மட்டுமே கௌரவத்துக்காகவும், கர்வத்துக்காகவும் மிக அதிகமாக நுகர்கிறான். அவனது ஒவ்வொரு நுகர்விலும் பூமிப்பந்து அதிர்ந்து அடங்குகிறது. அவ்வாறான ஆபத்தான நுகர்வு கலாச்சாரங்களுள் ஒன்றாகிவிட்டது திருமணமும். அதனா லேயே பசுமைத் திருமணம் என்கிற கருத்துருவை உருவாக்கினோம். ஓர் இடத்துக்கான தேவைகளை அந்த இடத்தில் இருந்தே பூர்த்தி செய்துக் கொள்வது; சுற்றுச்சூழலை மாசுப்படுத் தாமல் இருப்பது; ஆடம்பரம் தவிர்ப்பது - இவையே பசுமைத் திருமணங்களின் அடிப்படை.
எனக்கும் என் மனைவி செங் கொடிக்கும் நடந்த திருமணம் பற்றி சொன்னால் பசுமைத் திருமணத்தைப் பற்றி புரிந்துக்கொள்வீர்கள். தொழுதூரில் இருக்கும் என் வீட்டு தோட்டமே திருமண களம். மா, பலா, வாழை, தென்னை, தேக்கு, கறிவேப்பிலை, எலுமிச்சை, ஏராளமான பறவைகள், உயிர்கள் நிரம்பிய ஒற்றைக் கேணி மற்றும் உறவுகள், நட்புகள் சூழ அங்கு என் திருமணம் நடந்தது.
திருமண அழைப்பிதழுக்கான செலவு 30 பைசா
என் திருமண அழைப்பிதழுக்கான செலவு 30 பைசாவுக்கும் குறைவே. என் தோட்டத்து தென்னங்கீற்றுகளே திருமணப் பந்தல் ஆனது. பகல் நேரம் என்பதால் மின்சாரம் தேவை இல்லை. வரவேற்பு பேனரும் தண்ணீர் சாயத்தால் எழுதப்பட்டது. அதை துவைத்தால் மண்ணுக்கு கேடு இல்லாத தண்ணீர் சாயம் கரைந்து போய்விடும். துணியை மறுபயன்பாடு செய்துகொள்ளலாம்; கொண்டோம்.
மணமேடை ஏறும் முன்பு இயற்கைக்கு நன்றி சொல்ல மரக்கன்றுகளை நட்டோம். உழவுக்கு வந்தனை செய்ய மண மேடையில் உழவு கலப்பை வைத்தோம். எங்களுக்கு மலர் மாலைகளுடன், தச்சு வேலை செய்யும்போது கிடைக்கும் மரச்சுருள்களை மாலையாக அணிவிக் கப்பட்டது. திருமண நிகழ்ச்சியில் நாங் களே மேடையை விட்டு இறங்கி, ஒவ்வொரு விருந்தினரிடமும் சென்று வாழ்த்துப் பெற்றோம். பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக புத்தகக் கண்காட்சியும், மண்பாண்டக் கலை கண்காட்சியும் நடத்தினோம். விருந்தினர்களுக்கு தாம்பூலப் பரிசாக மரக்கன்று, சூழலியல் கையேடு வழங்கினோம்.
இதுவரை கடலூர், ராமநாதபுரம், மண்டபம், சேலம், ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் 20-க்கும் மேற்பட்ட பசுமைத் திருமணங்களை நடத்தியுள்ளோம். வரும் பிப்ரவரி 2-ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ஒரு பசுமைத் திருமணத்தை நடத்துகிறோம். நீங்களும் வாருங்கள், வந்து வாழ்த்துங்களேன்” என்றார்.
பசுமைத் திருமணங்கள் பெரும்பாலும் கிராமங்களிலேயே நடத்தப்படுகின்றன. பாரம்பரிய சிறு தானியங்கள் மற்றும் இயற்கை விவசாய வகை உணவுகளே விருந்தாக வழங்கப்படுகிறது. காலை விருந்தாக தேன், தினை மாவு உருண்டை, முக்கனிகள், வரகு அரிசி பொங்கல், நவ தானிய அடை, நாட்டு காய்கறி அவியல், கம்மங்கூழ், கேழ்வரகு கூழ், இளநீர், சுக்குமல்லி தேநீர், பனை வெல்ல பானகம், நொங்கு வழங்குகிறார்கள். மதியம் சிகப்பு அரிசி சாதம், நாட்டு காய்கறிகள் குழம்பு, கம்பு தயிர் சாதம், கடைந்த கீரை, அவியல், துவையல், பனை வெல்லம் பருப்பு பாயாசம் வழங்கப்படுகிறது. சமையலுக்கு எண்ணெய் கிடையாது. பெரும்பாலும் கிராம நீர்நிலைகளின் நீரையே இயற்கை முறையில் சுத்திகரித்து குடிநீராக பரிமாறுகிறார்கள்.

http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article5499142.ece..