Tuesday, September 27, 2011

"ஜீன காஞ்சி"-சமண காஞ்சி -திருப்பருத்திகுன்றம் ,காஞ்சி.

                                                   
திருப்பருத்திகுன்றம் ,காஞ்சிபுரத்தில் உள்ளது.இப்பகுதி "ஜீன காஞ்சி"-சமண காஞ்சி என்று அழைக்கப்படுகிறது.

மற்ற இந்து கோயில் போன்ற கட்டிட அமைப்பை கொண்டிருக்கிறது.
சமண மதத்தை தோற்று வித்த மகாவீரரின் உருவச்சிலை கருவறையில் வீற்றிருக்கிறது.மேலும் சுற்றிலும் மற்ற தீர்த்தங்கரர்கள் சிலை உள்ளது.இந்திய தொல்லியல்  துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.இப்பகுதியில் வாழும் சில சமண மதத்தவர்கள் மட்டுமே பெரும்பாலும் இங்கு வந்து செல்கின்றனர்.

                                 
கோயிலின் மேற் கூரையில் சமண மத,தத்துவ விளக்கங்களும்,குறியீடுகளும் வரையப்பட்டு உள்ளன.மிக எளிமையாகவும்,ஆழமான பொருள் பொதிந்த தலமாக  விளங்குகிறது.பூனைகள் குறுக்கிடும் பூசை அறைகளும்,ஒரு விளக்கு மட்டும் ஒளி பாய்ச்சும் அறைகளும் அழகு.
அலங்காரமும்,பட்டு துணிகளும் மாலைகளும் போர்த்தி,பசனைகள் முழங்கும் இந்து வழிபாட்டில் இருந்து விலகி,ஆடை இல்லாத,அலங்காரம்,அணி மணிகள் இல்லாத 
விட்டு விடுதலையாகிய நிருவான நிலையில் நிலை கொண்டுள்ளார் மகாவீரர்.
                           
சிலையின் சில பகுதிகள் உடைந்து பின்பு வடிவமைக்கப்பட்டு உள்ளது.ஓவியங்கள் புதிததாக வண்ணம் ஏற்றிக்கொண்டிருக்க்கிறது.
வைதீக மதத்திற்கு மாற்றாக வந்த மகாவீரரை காண இங்கே செல்லலாம்.பின்புறத்தில் பழைய மரம் ஒன்று உள்ளது.அது பல நூற்றாண்டு கடந்த ஒன்றாக இருக்கக்கூடும்,அதன் அடி மரத்தில் இருந்து கிளைத்து விரியும் இளங்கிளைகள் மரமாகி நிற்கின்றது.

                                  காஞ்சி என்றால்,காமாட்சி,பட்டு,இட்லி மட்டுமில்லாது ,சமணம்,புத்தம், மகாவீரர் என்று காஞ்சி வேறு ஒரு காட்சி அளிக்கிறது.



Wednesday, September 21, 2011

"தச்சூர்.திரு மூக்கன் அய்யா அவர்கள். 'நாங்கூர் காடு'காவலர்.திட்டக்குடி வட்டம்,கடலூர் மாவட்டம்

                                                         


"கொஞ்சம் ஆடுங்க இருக்கு மேய்ச்சலுக்கு,அக்கம் பக்கம் நிலத்த காவல் காக்க சொல்லுவாங்க,இங்க அடிக்கடி காட்டு பன்றி ,மானுங்க எல்லாம் வரத்து உண்டு.அப்பப்ப கூலி வேலையக்கு போறது உண்டு,இப்ப வயசாயிட்ட தால முடியறது இல்லை.
மத்த படி,இங்க யாராவது மரம் வெட்டுனா,ஆடு மாடு மேய்ச்சால்,நான் புகார் சொல்வது உண்டு. அவர்களுக்கு அவதராம் (தண்டனை தொகை ) விதிப்பது உண்டு.அப்ப பாத்து ஆபிசருங்க எதாவது கொடுப்பாங்க ....
இது தாங்க என் வருமானம்,வாழ்க்கை எல்லாம் என்கிறார்."தச்சூர் திரு மூக்கன் அய்யா அவர்கள். 

                               

இவர் ,அய்யா.திரு.மூக்கன்.தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர்.இது கடலூர் மாவட்டம்.சென்னை-திருச்சி நெடுஞ்சாலை,NH-45,திட்டக்குடி வட்டம்,இராமநத்தம்(தொழுதூர்),மேற்கில் உள்ளது.இங்கு நாங்கூர் எனும் கிராமத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதி உள்ளது.இது 'நாங்கூர் காடு' என்று அழைக்கப்பட்டு வருகிறது.இந்த காட்டை தான் இந்த மூக்கன் 
என்பவர் காவல் காத்து வருகிறார்.இது அரசு பணியும் அல்ல.இவர் கடந்த 30 ஆண்டுகளாக இந்த பணியை செய்கிறார்.படிப்பு இல்லாத காரணத்தால் தன்னை நிரந்தரம் செய்ய வில்லை என்கிறார்.

                           (மழை நேரத்தில் ஒதுங்கி காவலிருக்கும் குடிசை).

இவருக்கு காவலுக்கு நிரந்தர மாத ஊதியமாக எதுவும் கிடையாது.மேற்படி எப்பாவது யாராவது வேட்டையாடி அல்லது மரம் வெட்டி பிடிபட்டால் மட்டுமே அரசு சன்மானமாக தருவது உண்டு.வருமானம் இல்லாத போது எப்படி இதை தொடர்கிறிர்கள் என்றால்..'வர்ற ஆபிசருங்க பாத்துக்க சொல்றாங்க' நாமும் பழகிட்டோம்.
இதுவே புடிச்சி போச்சி.இனி வேற எந்த வேலைக்கு போகறது என்கிறார்.
                               

        




                                  (கிளா க்காய்)



மக்களும் இவரையே ஏற்று கொண்டு விட்டார்கள்.இவரது பேச்சுக்கு கட்டுப்படவும் செய்கிறார்கள்.இந்த காட்டில் உள்ள அனைத்து வகையான மரங்கள்,செடிகள்,விலங்குகள் அனைத்தும் இவரது அறிவு களஞ்சியம்.இதன் வனத்துறை காவலருக்கு கூட தெரியுமா என்பது ஐயமே.இந்த சித்திரை மாதம் போட்ட பனை கொட்டைகள் முளைத்து கன்றுகளாக வந்து உள்ளது.அதை பெருமிதமாக நம்மிடையே அழைத்து காட்டுகிறார்.நமக்கும் பெருமிதமாக உள்ளது.
                                                            (ஆவாரம் பூ )
எந்த ஒரு பெரிய எதிர் பார்ப்பும் இல்லாமல்,மனிதர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் திரு.மூக்கன் போன்ற சிலர்.
இவர்களால் தான் வானம் மண்ணில் இன்னும் மழை பெய்கிறது.ஆம் இவர் போன்ற நல்ல உள்ளங்களுக்க்காகவும்,இவர் காக்கும் காடுகளுக்காகவும்.

                                              

Tuesday, September 20, 2011

நான் செத்தாக்க என்னை தூக்கி போட வருவியா..............

                      
                                                
 
என்ன பெத்த ராசா 
நான் செத்தாக்க என்னை தூக்கி போட வருவியா....

பேரா...
பவுனு,காசுன்னு எதுவும் வேண்டாம் 
பாடைய நிறைக்க பூவு மட்டும் போதும் 

பட்டு புடவையும்,பட்டணத்து சேலையும் வேண்டாம் 
எம் பாடைய மறைக்க பார்டர் வச்ச சேலை போதும்

பக்கத்து ஊரு மேளம் வேண்டாம் 
ஊரை கூட்டும் ஒப்பாரியும் வேண்டாம் 
எந் தலை மாட்டுல கொஞ்சம் நேரம் நின்னா போதும் 


எம் பேரா..
வேட்டுச் சத்தமும்,வெட்டிச் செலவும் வேண்டாம் 
இருக்கும் போதே இரைச்சல் இல்லை 
இறந்த பின்னே சத்தம் எதுக்கு 

யாரு வராவிட்டாலும் பரவாயில்லை 
பேரா.. நீ
காரு ஏறி வந்து விடு...

பேரு சொல்ல பேரன் இருக்கான்னு ஊரு சொல்ல 
எந்த தேசம் போயிருந்தாலும்,எட்டி வந்து விடு ...

என் கட்டையா புதைக்கும் வரை 
கிட்டயே இருந்து விடு ..

பேரா..
பழைய துணியில முடிஞ்ச சேதி ஒன்னு 
அடுக்கலயில காத்திருக்கும் 
அப்புறமா திறந்து பாரு.............
எம் பேரா..
நான் செத்தாக்க என்னை தூக்கி போட வருவியா...


                                    
                                             

Tuesday, September 13, 2011

"இறந்தோருக்கு பசுமையில் ஒரு தாசு மகால்" . இவர்களே மனிதர்கள்.


                                                     


சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை,NH-45 இராமநத்தம்(தொழுதூர்) இல் இருந்து கிழக்காக  செல்லும் பாதையில் இருக்கிறது அரங்கூர் எனும் கிராமம்.
இங்கே திரு.அருச்சுனன் என்பவர்,கடந்த மூன்று ஆண்டு காலமாக ஓர் அரிய பணியை செய்து வருகின்றார்.முன்பு மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜேந்திர ரதுனு,தற்போது மாவட்ட ஆட்சியராக  உள்ள வரும் இவரை நேரில் வந்து பணியை பாராட்டி சென்றனர். 

                                                                                             
இறந்தோரை புதைக்கும் இடுகாட்டை,ஒரு சோலை வனமாக மாற்றி பராமரித்து வருகிறார்.பல்வேறு வகையான பழ மரங்கள் காய்த்து உள்ளது.பல வண்ண பூக்கள் அங்கே பூத்து அழகு செய்கின்றது.பார்ப்பவர் எவருக்கும் அது இடுகாடு என்ற எண்ணம் வருவதில்லை.
பெண்களும்,குழந்தைகளும் வராத சுடுகாட்டிற்கு பழம் பறிக்கவும்,பூக்கள் சேகரிக்கவும் வருகிறார்கள்.

                                                       
தனது குடும்பத்திடம் தனது வருமானம் முழுக்க 'நந்தவன பணிக்காக' செலவு செய்ய ஒப்புதல் பெற்று வரும்,இவர் ஒரு உழவு வேலை செய்யும் உழைப்பாளி.
செல்வம் படைத்தவர் அல்லர்.இதில் விளையும் வாழை போன்றவை விற்று வரும் வருமானத்தை ஊர் நிர்வாகத்திடம் கொடுத்து விடுகிறார்.இதற்கு தண்ணீர் பாய்ச்சும் செலவை இவர் சொந்த செலவில் செய்கிறார்.எவரிடமும் பணம் பெறுவதில்லை.
                                       
                                         
இவரை பற்றி ஜூனியர் விகடனில் செய்தி வந்தது.10/09/2011(வடக்கு மண்டலம்)
அதையும் அவர் அறிந்திருக்கவில்லை.
தன்னை பற்றி ஒரு செய்தி வந்திருப்பது கூட அறிந்திடாத மனிதர்கள் செயலை மட்டுமே செய்கிறார்கள்,மற்றோர் செய்திகளை மட்டுமே செய்கிறோம்.

அங்கே புதைக்கப்படும் உடல்கள் வரிசையாக இடப்படுகின்றன.வேறு இட நெருக்கடி இல்லை.
                               
ஷாஜகான் தன் மனைவி ஒருத்திக்காக ஒரு தாஜ்மகல் கட்டினார்.இந்த ஏழைகள் உறங்கும் இந்த மண்ணில் ஒரு ஏழையால் ஒரு பூஞ்செடியோ,ஒரு மரக்கன்றோ தானே நட முடியும்.அதை செய்து காட்டியதில் இந்த 'அரங்கூர் அர்ச்சுனன்' மா மன்னனாகவே திகழ்கிறார்.