Saturday, October 30, 2010

அங்கே தீபாவளி இங்கே தீராவலி'



யாதும் ஊரே 
யாவரும் கேளிர் 

யாவரும் கேளீர்
யாதும் உயிரே 

ஈழக்குரல் 
      ஈனக்குரல் கேட்கலையோ

அக்கரை இந்தியாவிலே 
      ஆண்டுக்கொரு நாள் தீபாவளி

இக்கரை ஈழத்திலே
      அன்றாடம் தீராவலி

எட்டி பார்த்துக்கொள்வோம் 
   எதிர் வீட்டை ஜன்னல் வழியே

இப்போது எட்டும் தூரம் 
    வீடே இல்லை 

'எலி வளைனாலும் தனி வளை'

 இப்ப எலியாக கூட இல்லை ....
            எலி கூடவே வாழ்க்கை 

நும் இராணுவச் சக்கரத்திற்கு   
   எம் மக்கள் மண்டையோடு 
   எலுமிச்சை காயாச்சு..

இத்தனைக்கும் பின் -எங்கள் உயிர் 
    இரக்கத்தின் மிச்சமா 
    இனவெறியின் எச்சமா

கதறி அழும் குழந்தைக்கு 
கொடுப்பதற்கு பாலில்லை

வெடித்து அழும் வேதனையிருந்தும் 
கண்களில் ஈரமில்லை 

பசிக்கும் வயிருக்கு
பச்ச அரிசியாவது வேணும்

உப்பு மிளகாய் காரத்திற்கு
எங்கள் உதிரமே போதும் .. 




Thursday, October 21, 2010

அதுவே என் நாடு




அண்ட அணுவின் வழி 


உயிர் கொடுத்தாள்

அடி வயிற்றில் இடம் கொடுத்தாள் 

தொப்புள் கொடி வழியாக 
உயிர்க்காற்றும்
உண்டியும் கொடுத்தாள்

பிறப்பின் போது துண்டித்தாள்
தொப்புள் கொடி

இருப்பினும்  
அவளே  என்  தாய்  

துரத்தியடிக்கப்பட்டாலும்  
அதுவே  என்  நாடு 

பெண் : பரிணாமமும் பரிமாணமும்



காலத்தின்
உடலுக்கு -எம் குருதி

எம்மின் ஆன்மா
மானுடத்தின் மனசு 

இருளடைந்த பிரபஞ்சத்துக்கு 
எம் பாவை விளக்கெரிக்க...

மனித இனத்தின் தொடர்ச்சிக்கு 
சூல் கொண்ட உயிர்கள் சுமந்து 
பெண்குலத்தின் இடுப் பொடிந்தது

நும் வயிறு குளிர 
அனலில் எரிந்து ,கஞ்சி காய்ச்ச
அடுப்பெரித்தவர்கள்

வைரத்தின் 'வடி'களோடும்
வலிமையோடும் 

வருகிறார்கள் ! திசையின் எப்பக்கத்தில் இருந்தும் !!

                              

மண்ணில் எவரும் அகதிகள் அல்லர்


விலங்கிற்கு  பிறப்பவை
விலங்குகள் 

மனிதர்களுக்கு பிறப்பவர்கள் 
மனிதர்கள் 

மண்ணில் பிறக்கும் எவரும்
மைந்தர்களே 

அகதிகள் அல்லர் 



 .

Wednesday, October 20, 2010

தமிழர்கள் பார்வைக்கு..

தமிழ் நாடு +அரசு =தமிழ்நாட்டரசு 


இலக்கணம் ;ஒற்று இரட்டித்தல்:
​​

ஒற்​று​மிகுதலோடு சேர்த்து எண்ணத்தக்கது ஒற்று இரட்டித்தல் என்னும் இலக்கண விதியாகும்.​
 சோறு+பானை= சோறுப்பானை என்று எழுதுவதில்லை.​ சோற்றுப்பானை என்கிறோம்.​ ஆறு + வழி = ஆற்றுவழி என்கிறோம்.​ சோறு,​​ ஆறு என்பவற்றுள் ​(ற்+உ=று)​ உள்ள "ற்' மற்றுமொன்று கூடி வருவதால் ஒற்று இரட்டித்தல் என்றுரைக்கிறோம்.​ சோ+ற்+ற்+உ =(சோற்று)

ஒற்று இரட்டித்த பின் வலி ​(வல்லொற்று)​ மிகுந்து சோற்றுப் பானை என்றாகிறது.​ அடையாறு + இல் = அடையாற்றில் என இங்கும் ஒற்று இரட்டித்தல் வேண்டும்.​ அடையாறில் என்று எழுதுவது பிழை.​ ஆற்றில் வெள்ளம் வந்தது என்றுதானே சொல்லுகிறோம்.​ ஆறில் வெள்ளம் வந்தது என்று சொல்வதில்லையே.​ மாடு+சாணம்= மாட்டுச்சாணம் என்கிறோம்.​ வீடு + சோறு= வீட்டுச் சோறு என்கிறோம்.
​ இந்த இலக்கணத்தை மறக்க வேண்டாம்.

தமிழ்நாடு+ அரசு = தமிழ்நாட்டரசு என்றுதான் எழுத வேண்டும்.
​ தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் என்பது பிழை.​ தமிழ்நாட்டரசுப் போக்குவரத்துக் கழகம் என்பதே சரியானது.
​ தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் என்று பிழையற்ற தமிழில் ஒரு நிறுவனம் குறிக்கப்படும்போது,​​ தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஏன் வந்தது?​ தமிழ்நாடு அரசு ஏன் வந்தது?​ தமிழ்நாட்டரசு என்று மாற்றுக.​ கிணறு+தவளை= கிணற்றுத் தவளை. காடு +பாதை = காட்டுப்பாதை என்றெல்லாம் மக்கள் சரியாகச் சொல்லும்போது நாடு+அரசு= நாட்டரசு என்றுதானே எழுத வேண்டும்?

கட்டுப்பாடு+அறை = கட்டுப்பாட்டறை எனச் சொல்க.​ மேம்பாடு + திட்டம் = மேம்பாட்டுத்திட்டம் என்க.​ நம்நாடு + சட்டம் = நம்நாட்டுச் சட்டம் தானே.​ ​​


நன்றி ;தினமணி கதிர் .03/10/2010;. கவிக்கோ ஞானச்செல்வன் 

Tuesday, October 19, 2010

தென்னாடு என் நாடு


தென்னாடு என் நாடு




வீடு போன்ற நாட்டை இழந்தோம்
நாடு போன்ற வீட்டை இழந்தோம்

மீண்டும் மீண்டும் எழுவோம்
மீண்டு எழுவோம்