ஆறுமுகம் பெரியப்பா....,
எப்போதும் உழைத்துக்கொண்டு இருக்கும் ஒரு சராசரி உழவர்.காலையில் எழுந்து ,ஆடு, மாடுகளுக்கு,தண்ணீர் வைத்து அவற்றை வேற்று இடத்தில பிடித்துக்கட்டி என்று இவற்றை மேய்ச்சலுக்கு அழைத்துக்கொண்டு போகும் வரை தேவையான வற்றை செய்துக்கொண்டு இருப்பார்.இவருக்கு தெரியாத வேலை என்று எதுவும் இருந்தது இல்லை.வயலுக்கு சென்றுவிட்டால்,உழுவது முதல்,வாய்க்கால்,வரப்பு செத்துவது வரை எல்லாவேலையையும் செய்வர்.வண்டி மாடு இப்போது இல்லை.
மோட்டர் வண்டி உழவு,எருவுக்கு பதில் செயற்கை உரம் என்று விவசாயத்தின் முகம் மாறிவிட்டது.எப்படித்தான் விவசாயத்தின் முகம் மாறினாலும்,காலம்,காலமாக ஒரு உழவனாக வாழ்ந்தவருக்கு தமக்கு தெரிந்த வேலைகளை விட்டு விடமுடியவில்லை.தென்னை மட்டையில் இருந்து கீற்று பின்னுவது,பனைமட்டை ஓலை கொண்டு கூரை மேய்வது,வைக்கோல் கொண்டு கயிறு திரிப்பது என்று எல்லாவற்றிலும்,தம் கைவண்ணத்தை காட்டிவிடுவார்.தேசிய ஊரக வேலைதிட்டத்தை,ஏரி வேலை என்று சொல்லும் பெரியப்பா,இப்போது அந்த வேலைக்கு சென்று வருகிறார்.இப்போது ஊருக்கு சென்றிருந்த போது ஊரக வேலைதிட்டத்தை,முடித்துக்கொண்டு வந்தவர் வரும் போது ''அழிஞ்சி'' மரத்தின் சிறுகிளைகளை எடுத்து வந்திருந்தார்.
அவற்றை கொண்டு வெட்டியதை அள்ளும் கூடை என்பதால்,வெட்டிக்கூடை
என்று அழைக்கப்படும் என்று நினைக்கிறேன்,அதை செய்துகொண்டு இருந்தார்.
இதனையே தட்டையாக செய்தால் ''தட்டுக்கூடை''என்று அழைக்கப்படும்.இப்போது இதற்கு பதில் அலுமினிய கூடை,பிளாஸ்டிக் கூடைகள் வந்துவிட்டன.இந்த ''அழிஞ்சி'' மரத்தின் சிறுகிளைகளை உடனடியாக கொண்டு கூடைகள் முடையலாம்.இவை காய்ந்து விட்டால் அவற்றை ஊறவைத்து பின்னர் முடையலாம்.உழவுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்து முடிக்கும் திறமைகொண்டவர்.மண்வெட்டிக்கு கைப்பிடி செய்தல்,அரிவாளுக்கு கூர் தீட்டுதல் என அனைத்தும் தெரிந்தவர்.எப்போதும் அலுக்காமல் வேலை செய்துக்கொண்டே இருப்பவருக்கு, இதுவரை சக்கரை,மூட்டு வலி,குருதி கொதிப்பு என்று எதுவும் இல்லாத நிறைவானவர்.பேரபிள்ளைகளுக்கு விளையாட்டு பொருள்கள் செய்து கொடுத்து அவர்களை வியக்கச் செய்பவர்.
ஒரு உழவராக இருக்க,வாழ பல வேலைகள் தெரிந்து இருக்கவேண்டி இருக்கிறது.உழவர்களின் உழைப்பை பெற எதுவும் தெரிந்து இருக்க தேவை இல்லை இந்த சமுகத்திற்கு.பணத்தை மட்டுமே வைத்திருந்ததால் போதுமானது என்று நினைக்கிறது.ஆனால் அவர்களைப்போல்,ஒரு உழவனைப்போல் ஒரு நாளேனும் மண்ணோடும்,மனிதர்களோடும் நெருக்கமாக,பிணைப்புடன் வாழ முடியுமா....என்று தெரியவில்லை ?.